சென்னை: 'கே.ஏ.ஜி., டைல்ஸ்' நிறுவனத்தில் நடந்த, வருமான வரி சோதனையில், 220 கோடி ரூபாயை, வருவாய் கணக்கில் காட்டாமல் மறைத்தது அம்பலமானது.
நிறுவனத்தில், 8.30 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை, வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னையை தலைமைஇடமாக வைத்து, கே.ஏ.ஜி., இந்தியா டைல்ஸ் நிறுவனம், 25 ஆண்டுகளாக செயல்படுகிறது. ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல், வர்த்தகம் செய்யும் இந்நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் கிடைத்ததால், வருமான வரித்துறை களமிறங்கியது.
சென்னை, தாம்பரத்தில்உள்ள கே.ஏ.ஜி., நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம்; கோவை, மதுரை, குஜராத் மற்றும் கோல்கட்டா நகரங்களில் உள்ள, 20 இடங்களில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை, சோதனையை துவக்கியது. இந்த சோதனை நேற்றும் தொடர்ந்தது.இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய கமிஷனர், 'சுரபி' அலுவாலியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்திற்கு, தமிழகம், குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது, கணக்கில் காட்டாத ஆவணங்கள், ரகசிய அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை; அதற்கான பிரத்யேக மென்பொருள் பயன்படுத்தி, கண்டறியப்பட்டன.
கடந்த ஆண்டு பரிவர்த்தனையில், 50 சதவீதம் கணக்கில் காட்டாமல், 120 கோடி ரூபாய் வருவாயை மறைத்ததும்; 100 கோடி ரூபாய் வரை, கணக்கில் காட்டாமல், பங்குகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், 8.30 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனையும், விசாரணையும் நடந்து வருகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான சோதனை மற்றும் கண்காணிப்பு பணியிலும், வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE