சென்னை: ''பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் மீது, நடவடிக்கை எடுக்கும் வரை, போராட்டம் தொடரும்,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசை கைது செய்யக்கோரி, தி.மு.க., மகளிர் அணி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி எம்.பி., கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜேஷ்தாஸ், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பணி நீக்கமோ; இடைநீக்கமோ செய்யப்படவில்லை.இப்படி, பதவி அதிகாரத்தில் உள்ள ஒருவர், விசாரணையின் போது, சாட்சிகளை தடுத்து நிறுத்துவார்.ஏற்கனவே சாட்சி சொல்ல வந்தவர்களை, எஸ்.பி., கண்ணன், தடுத்து நிறுத்தியுள்ளார். இவர் பதவியில் இருக்கும் வரை, விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை.
இதனால், குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்; கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். ஒரு பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், அவருக்கு கீழ், வேலை செய்யும் பெண் அதிகாரிகளின் நிலைமை எப்படி இருக்கும்.அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அனைத்தும், மூடி மறைக்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சி வந்ததும், இதற்கென்று தனி விசாரணை கமிஷன் அமைக்கப்படும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், பெண்களின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படும்.முதல்வர் இ.பி.எஸ்., பெரிய குற்றவாளி என்பதால் தான், குற்றவாளிகளை தேர்ந்தெடுத்து, தன்னுடன் வைத்துள்ளார்.தமிழகம் வெற்றி நடை போடவில்லை; வெற்று நடை போடுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE