இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மார் 02, 2021 | Added : மார் 01, 2021
Share
இந்திய நிகழ்வுகள்கத்திகுத்து: பெண் உயிரிழப்புபுதுடில்லி: டில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு பெண்கள், மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம நபர், குழந்தையுடன் வந்த பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள், கூச்சலிட்டு, அவரை
today, crime round up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்

கத்திகுத்து: பெண் உயிரிழப்பு

புதுடில்லி: டில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு பெண்கள், மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம நபர், குழந்தையுடன் வந்த பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள், கூச்சலிட்டு, அவரை தாக்கினர்.உடனே, அந்த நபர், அந்த பெண்ணை, கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். படுகாயமடைந்த அந்த பெண் உயிரிழந்தார். இந்த காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அதை வைத்து, குற்றவாளியை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்

பாலியல் புகாரில் சிக்கிய கூடுதல் டிஜிபி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தமிழக கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஜடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் ஜபிஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது


latest tamil news


சென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்

சென்னை: வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டைல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் குழுமத்திற்கு சொந்தமான 20 இடங்களில் கடந்த பிப்., 26 அன்று ரெய்டு நடைபெற்றது. தமிழ்நாடு, குஜராத், கோல்கட்டா ஆகிய இடங்களில் நடந்த ரெய்டுகளில் ரூ.8.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராமல் டைல்ஸ் விற்பனை மற்றும் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள், மென்பொருட்கள் ரகசிய அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 50 சதவீத பரிவர்த்தனைகள் கணக்கில் வராதது தெரிந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 2,100 வழக்குகள்

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, அதிகவேகத்தில் சென்றதற்காக 16 வழக்குகள், அலைபேசியில் பேசியபடி வாகனத்தில் சென்றதற்காக 199, சிக்னலில் விதி மீறியதற்காக 67, அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிச் சென்றதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அதே போல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியதாக 119, ெஹல்மேட் அணியாமல் சென்றதற்காக 1014, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 681 என 2100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது, என போலீசார் தெரிவித்தனர்.

பச்சிளங்குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் அருகே உத்தனம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கதிர்வேல் 22. இவரது மனைவி சுகன்யா. இவர்களின் மகள் தர்சிகா ஸ்ரீ 7 மாதம். கதிர்வேல் குடும்பத்துக்கும் பண்ணைபட்டியை சேர்ந்த செந்தில்குமார் 44, குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் கதிர்வேல் வீட்டுக்கு வந்த செந்தில்குமார், தொட்டிலில் தூங்கிய குழந்தையை குளக்கரைக்குத் தூக்கிச் சென்றார்.

குழந்தையின் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். குழந்தையின் அழுகுரல் கேட்டுவந்த சுகன்யா தடுத்தார். அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி பற்ற வைக்க செந்தில்குமார் முயற்சி செய்தார்.அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தாய், மகளை மீட்டனர். சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.

திருப்பூரில் ஏ.டிஎம்., மிஷின் அலேக்

திருப்பூர்: திருப்பூர் அருகே, நேற்று அதிகாலை, சினிமா பாணியில், காரில் கயிறு கட்டி இழுத்து, ஏ.டி.எம்., மெஷினை, 'அலேக்'காக கொள்ளையடித்து சென்ற கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் அருகே, கூலிபாளையத்தில், ஊத்துக்குளி நால் ரோடு பகுதியில், பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில், ஏ.டி.எம்., மையமும் உள்ளது. நேற்று காலை, பொதுமக்கள் சிலர், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றபோது, ஏ.டி.எம்., மெஷின் மாயமாகி இருந்தது.தகவலறிந்து, ஊத்துக்குளி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் அங்கு வந்தனர். ஏ.டி.எம்., மையத்துக்குள் இருந்த, 'சிசிடிவி' கேமராவில், ரசாயனம் தெளிக்கப்பட்டிருந்தது. இதனால், காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை.

நடந்தது என்ன?வளாகத்தில் இருந்த, மற்றொரு கேமராவை பார்வையிட்ட போது, கொள்ளையடித்த காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், ஐந்தாறு பேர் அடங்கிய கொள்ளை கும்பல், அதிகாலை, 4:15 மணியளவில், ஏ.டி.எம்., மையத்துக்கு வருகிறது.

அவர்கள் வந்த, 'டாடா சுமோ' காரை, மையம் அருகே நிறுத்துகின்றனர்.காரின் பின்பகுதியில், கிரேனில் பயன்படுத்தப்படும் இரும்பு கயிற்றின் ஒருமுனையை கட்டுகின்றனர்; மற்றொரு முனையை, ஏ.டி.எம்., மெஷினை சுற்றி இறுக்கமாக கட்டுகின்றனர்.பின், மூன்று முறை, காரை முன்பக்கமாக இயக்குகின்றனர். இருப்பினும், ஏ.டி.எம்., மெஷினை வெளியில் எடுக்க முடியவில்லை. நான்காவது முறை, காரை அதிவேகமாக இயக்குகின்றனர். இழுத்த வேகத்தில், ஏ.டி.எம்., மெஷின், மைய கதவை உடைத்து, வெளியே வந்து விடுகிறது. மெஷினை காரில் எடுத்து போட்டு, கும்பல் தப்பிச் செல்கிறது.இந்த கொள்ளை நடந்தபோது, சாலையில் வாகனங்கள் கடந்து கொண்டிருந்ததும், கேமராவில் பதிவாகியுள்ளது.'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' என்ற ஆங்கில படத்தில், காரில் சங்கிலி கட்டி, ஏ.டி.எம்., மெஷின் கொள்ளை அடிக்கப்படும். இதே பாணியில், கொள்ளை நடந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.

மதுரையில் வெங்காய திருடர்கள் 3 பேர் கைது

மதுரை: மதுரை மார்க்கெட்டில், வெங்காயங்களை தொடர்ந்து திருடி விற்ற மூவர், கைது செய்யப்பட்டனர்.

மதுரை, அன்பு நகரைச் சேர்ந்தவர் அக்பர், 43. பரவை காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம், உருளை கிழங்கு மொத்த வியாபாரம் செய்கிறார். சில நாட்களாக மார்க்கெட்டில், அக்பர் உட்பட சிலரது கடைகளில் வெங்காயம் திருடுபோனது.கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பிப்., 27ல் மூன்று பேர், 5 கிலோ வெங்காய மூட்டைகளை ஆட்டோவில் திருடிச் சென்றது தெரிந்தது. அதில் ஒருவர், ஏற்கனவே மார்க்கெட்டில் வேலை செய்த, தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த இத்ரீஸ், 21, எனத் தெரிந்தது

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றவர்கள் பலி

செம்பரம்பாக்கம் : செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்கச் சென்ற, தந்தை, மகன், மகள் ஆகிய மூவரும், நீரில் மூழ்கி பலியாகினர்; நீண்ட போராட்டத்திற்குப் பின், மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி : ஆவடி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆவடி, நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம், 20; கூலி தொழிலாளி. இவர், 15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தனியிடத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்த புகாரின் அடிப்படையில், ஞானப்பிரகாசத்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த ஆவடி போலீசார், நேற்று முன்தினம் அவரை சிறையில் அடைத்தனர்.


உலக நிகழ்வுகள்

மியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை

யாங்கன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் இதனால் கொதிப்படைந்துள்ளனர்.

வீட்டுச்சிறையில் முக்கிய தலைவர்கள்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைற்றுவரும் நிலையில் அவசர நிலையை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக ஜனநாயக ஆதரவாளர்களது போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மியான்மர் நாட்டில் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. ஆங் சன் சூ காய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X