வாஷிங்டன்: பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயங்குவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, அரசக் குடும்பத்துக்கு எதிராகவும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராகவும், அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார்.மிரட்டல் வந்ததால், அமெரிக்காவில் தஞ்சம்அடைந்தார் கசோகி. இந்நிலையில், துருக்கியில் உள்ள சவுதி அரேபிய துாதரகத்துக்கு, 2018ல் சென்ற அவர், மாயமானார். அவர் கொலை செய்யப்பட்டு, உடல் உறுப்புகள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின்படியே, கசோகி கொல்லப்பட்டதாக, அமெரிக்க உளவு அமைப்பு, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், நேரடியாக சவுதி அரேபிய இளவரசர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிடவில்லை. மாறாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த வேறு சிலர் மீது, அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.

கடந்தாண்டு இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, சவுதி அரேபியாவுக்கு எதிராகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காத, அதிபர் டிரம்புக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை, ஜோ பைடன் முன்வைத்தார்.ஆனால், தற்போது அவரும், டிரம்ப் பாணியை பின்பற்றுவதாக அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE