புதுச்சேரி: புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்ததாகவும், அதனை இந்திரா குடும்பத்திற்கு வழங்கியதாகவும் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அதனை நிரூபிக்காவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவதூறு வழக்கு தொடருவதாகவும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நேற்று (பிப்.,28) நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‛புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, நாராயணசாமியின் அரசுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. ஆனால், மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் வந்து சேரவில்லை. அந்த பணத்தை, டில்லியில் உள்ள இந்திரா குடும்பத்திற்கு திருப்பி அனுப்பும் வேலையை தான் நாராயணசாமி செய்திருக்கிறார்,' என குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
அமித்ஷா கூறியது என் மீது வைக்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஆகும். அதை நிரூபிக்க முடியுமா என அமித்ஷாவிடம் நான் சவால் விடுகிறேன். அவர் நிரூபிக்கவில்லை என்றால், தேசத்திற்கும் புதுச்சேரி மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், என்னையும் இந்திரா குடும்பத்தையும் களங்கப்படுத்த தவறான தகவல் வழங்கியதற்காக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.