அயோத்தி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி, கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி துவங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர், நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யும் பணி கடந்த பிப்ரவரி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி 45 நாட்களாக நடைபெற்று வந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2,100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில் சென்று நிதி வசூல் செய்துள்ளனர். ஜனாதிபதி முதல் சாலையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்கள் வரையில் பக்தியுடன் நிதி வழங்கி பகவான் ராமர் உடன் தங்களை இணைத்து கொண்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE