புதுடில்லி : துாத்துக்குடி துறைமுகம் உட்பட, நாட்டின், பல்வேறு மாநிலங்களில் உள்ள, 12 அரசு நிறுவனங்களின் கணினிகளில் ஊடுருவி, வைரஸ் தாக்குதல் வாயிலாக, நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்ய, சீனா, கடந்த ஆண்டு முயற்சித்ததாக, அமெரிக்க ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'ரிகார்டட் பியூச்சர்' என்ற நிறுவனம், அரசு நிறுவனங்களின் இணையதள பயன்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில், சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான, மின் செயல்பாட்டு கழகம், என்.டி.பி.சி., எனப்படும், தேசிய நீர் மின் கழகத்துக்கு சொந்தமான மின் நிலையங்கள், மின் பகிர்மான நிலையங்கள், தமிழகத்தின் துாத்துக்குடி மற்றும் மஹாராஷ்டிராவின் மும்பை துறைமுகங்கள் ஆகியவை, கடந்த ஆண்டு சீனாவின் 'சைபர்' தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.
'பிளக் எக்ஸ் மால்வேர் சி2' எனப்படும் வைரஸ் வாயிலாக, இந்த பொதுத்துறை நிறுவனங்களின் கணினிகள் ஊடுருவப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை, கடந்த ஆண்டு மார்ச்சி லேயே சீனா துவக்கிவிட்டது.
கிழக்கு லடாக் எல்லையில், இந்தியா - சீனா மோதல் வலுவடைவதற்கு முன்பே, இந்த ஊடுருவல் துவங்கிவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம், பாங்காங் சோ ஏரி பகுதியில், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்கு பின், இந்த ஊடுருவலை சீனா தீவிரப்படுத்தியது.
அந்த நேரத்தில் தான், கடந்த ஆண்டு அக்டோபரில், மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, நவி மும்பை பகுதி களில், இரண்டு மணி நேரம், மின் தடை ஏற்பட்டது.புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அன்றைய தினம், பங்கு சந்தையே முடங்கியது. சீன சைபர் தாக்குதலின் விளைவாகவே, இந்த மின் தடை ஏற்பட்டது.
இந்த ஊடுருவலில், சீனாவை சேர்ந்த, 'ரெட் எக்கோ' என்ற குழு சம்பந்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர், சீன உறவுத்துறை மற்றும் சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE