புதுடில்லி :கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடும் பணி, நேற்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தடுப்பூசி போட்டுக் கொண்டார். ''கொரோனாவில் இருந்து நாட்டை விடுவிக்க, அனைவரும் உதவ வேண்டும்,'' என, அவர் வலியுறுத்தினார்.
கொரோனாவுக்கு எதிராக, நம் நாட்டில், இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஜனவரியில் துவங்கிய முதல் கட்ட பணிகளில், சுகாதாரப் பணியாளர் உட்பட, முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
'கோவாக்சின்'
இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டப் பணி, நேற்று துவங்கியது. 'வேறு நோய் பாதிப்பு உள்ள, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நேற்று காலை, 6:30க்கு வந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தடுப்பூசி போடப்பட்டது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள, 'கோவாக்சின்' தடுப்பூசி, அவருக்கு போடப்பட்டது.புதுச்சேரியைச் சேர்ந்த நர்ஸ் பி.நிவேதா, அந்த தடுப்பூசியை பிரதமருக்கு செலுத்தினார். அப்போது, கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ரோசம்மா, உடனிருந்தார்.
ஊசி போட்ட பின், ''ஊசியை போட்டு விட்டீர்களா; ஒண்ணுமே தெரியவில்லையே,'' என, நிவேதாவிடம், சிரிப்புடன் மோடி குறிப்பிட்டார்.
தான் தடுப்பூசி போட்டுக் கொண்டது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ள செய்தி: நான் என்னுடைய முதல், 'டோஸ்' தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். கொரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் திறம்பட, மிகவும் வேகமாக செயல்பட்டுள்ள டாக்டர்கள், விஞ்ஞானிகளுடைய பணிகள் சிறப்பாவை.
நம்பிக்கை
தகுதியுள்ள அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இணைந்து, கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர், டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காக, அதிகாலை நேரத்தை, பிரதமர் தேர்வு செய்துள்ளார். அவர் வருகைக்காக, போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை.தடுப்பூசியின் செயல்பாடு குறித்து, பலர் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு உள்ளார். தடுப்பூசி போட்ட பின், கண்காணிப்புக்காக அரை மணி நேரம் காத்திருந்தார். இரண்டாவது டோஸ் தடுப்பூசி, 28 நாட்களுக்குப் பின், அவருக்கு போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா; டில்லியிலும், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், பாட்னாவிலும்; ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக், புவனேஸ்வரிலும், தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பிரதமர் தமிழில் பேச முயற்சித்தார்- புதுச்சேரி நர்ஸ் நிவேதா பெருமிதம்
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட, புதுச்சேரியைச் சேர்ந்த நர்ஸ் நிவேதா கூறியதாவது: இன்று, என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் பார்த்தேன். தடுப்பூசி மையத்திற்குள் பிரதமர் வந்ததும், 'வணக்கம்' எனக் கூறி, 'எங்கிருந்து வருகிறீர்கள்' என, கேட்டார். நான் புதுச்சேரி என்றேன். 'வணக்கம்' என, தமிழில் பேச முயற்சித்தார்.
'கால்நடை மருத்துவமனையில் பயன்படுத்தும் பெரிய ஊசி ஏதும் எடுத்து வந்தீர்களா' என, கேட்டார். முதலில் எங்களுக்கு புரியவில்லை. 'அரசியல்வாதிகளுக்கு தோல் அழுத்தமாக இருக்கும். பெரிய ஊசியாக எடுத்து வந்து போடுங்கள்' என, அவர் கூறியதால், அனைவரும் சிரித்தோம். தடுப்பூசிக்கு பயன்படுத்தும் சாதாரண ஊசி தான் என கூறினேன். ஊசி போட்டதும், 'அதற்குள் ஊசி போட்டு விட்டீர்களா' என, சந்தேகத்துடன் கேட்டார். ஊசி போட்ட பின், 30 நிமிடம் கண்காணிப்பில் காத்திருந்தார். எந்த பக்கவிளைவும் இல்லை. அனைவருக்கும் நன்றி கூறி, புறப்பட்டு சென்றார்.இவ்வாறு அவர் கூறினார்.
தனியாருக்கு மோடி அழைப்பு
பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு குறித்து நேற்று நடந்த, 'ஆன்லைன்' கருத்தரங்கில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:நாடு முழுதும் உள்ள, 12 கோடி சிறு மற்றும் ஏழை விவசாயிகள் பலன் பெறும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. விவசாய கடனுக்கான ஒதுக்கீடு, 15 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 16.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் வகையில், உணவு பதப்படுத்துதல் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதில், தனியார் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
'முன்னுதாரணம்'
கோவாக்சின் தடுப்பூசி குறித்து, பல்வேறு பொய் தகவல்கள், வீண் பிரசாரங்கள் செய்யப்பட்டன. தடுப்பூசி போட்டுள்ளதன் வாயிலாக, இந்த தடுப்பூசி சிறந்தது, பொய் தகவல்களை நம்ப வேண்டாம் என்பதை, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உணர்த்தியுள்ளார். எதிலும் நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்; அதை செய்து காட்டியுள்ளார். இந்த தடுப்பூசியை, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து எம்.பி., - எல்.எல்.ஏ.,க்கள் தடுப்பூசி போட்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE