மும்பை: நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடு பிடித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டில், கொரோனாவின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி வினியோகம் துவங்கி நடைபெற்று வருவதால், பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.எ னினும், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பது, நிலையற்ற சூழலுக்கு வழிகோலியுள்ளது. அதே சமயம், பொருளாதாரம் மீண்டும் வலுப் பெற்று வருவது, சாதகமான அம்சமாக உள்ளது. அனைத்து துறைகளிலும், தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
அதேசமயம், தனியார் முதலீட்டு பிரிவு மட்டுமே சுணக்கத்தில் உள்ளது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகளால், தாராள பணப்புழக்கத்துடன், நிதிச் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக, பின்னடைவில் இருந்த பொருளாதார வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் முன்னேற்றம் கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், வேளாண் உற்பத்தி, சாதனை அளவாக, 30.30 கோடி டன்னாக உயரும் என்ற மதிப்பீடும், பொருளாதார வளர்ச்சிக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.
எனினும், உணவுப் பொருட்கள் பணவீக்கம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு கவலை அளிக்கிறது. அதிகரித்து வரும் இதர வருவாய் மூலம், இந்த நெருக்கடியை சமாளித்து, விலை உயர்வை குறைக்க முடியும்; அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE