சென்னை :''அடுத்த, 10 ஆண்டுகளுக்கான என் லட்சிய பிரகடனத்தையும், தொலை நோக்கு பார்வை அறிக்கையையும், திருச்சியில், வரும், 7ம் தேதி அறிவிப்பேன்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், பிறந்த நாளை நேற்று கொண்டாடிய அவரது பேட்டி: கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீடு குறித்த பேச்சை துவங்கி இருக்கிறோம். தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. வரும், 7ம் தேதி, திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பான கூட்டம் நடத்தப்படும்; அதற்கான ஏற்பாடுகளை நேரு செய்து வருகிறார்.
அக்கூட்டத்தில், ஸ்டாலினான நான், என் லட்சிய பிரகடனத்தையும், தமிழகத்திற்கு, 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு பார்வை அறிக்கையையும் வெளியிடுவேன்.இதை செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய இலக்கையும், தொலை நோக்கு அறிக்கையாக தயாரித்துள்ளேன். இந்த அறிக்கையை, அடுத்த, 20 நாட்களுக்குள், இரண்டு கோடி குடும்பங்களிடம் சேர்க்க வேண்டும்.
தி.மு.க., மக்களுக்காக பணியாற்றும் என்பதை, என் பிறந்த நாள் செய்தியாக, நான் சொல்லிக் கொள்கிறேன். ஊழலுக்கு யார் துணை நிற்கின்றனர் என்பது, நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். கடன் குறைப்பு நடவடிக்கை, தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
பிறந்த நாள் வாழ்த்து
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று தன், 68வது பிறந்த நாளை கொண்டாடினார். காங்கிரஸ் எம்.பி., ராகுல், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிறந்த நாளை ஒட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்கள்; வேப்பேரியில் உள்ள, ஈ.வெ.ராமசாமி நினைவிடம் ஆகியவற்றுக்கு சென்று, ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கோபாலபுரம் வீட்டுக்கு சென்று, கருணாநிதி படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தன் தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார். பின், சி.ஐ.டி., காலனியில் உள்ள, ராசாத்தி வீட்டுக்கு சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றார். அதன்பின், ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு வந்த ஸ்டாலின், குடும்பத்தினருடன், 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
சென்னை, அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்டாலினுக்கு, தி.மு.க., நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், தொண்டர்கள், நீண்ட வரிசையில் நின்று, வாழ்த்துகள் தெரிவித்தனர். செங்கோல், வாஸ்து மீன், புத்தகங்கள், பண மாலை உள்ளிட்ட, ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினர். 'ஸ்டாலின் தான் வராரு... விடியல் தரப் போராரு' என்ற, தி.மு.க., பிரசாரப் பாடல் வீடியோவை, பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்டார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், நடிகர் ரஜினி ஆகியோர் தொலைபேசியில், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.க., தலைவர் வீரமணி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட தலைவர்கள், ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி, நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மகளிர் அணி செயலர் கனிமொழி, 'டுவிட்டர்' பக்கத்தில், 'அண்ணன் ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப் போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும், தி.மு.க., ஆட்சியில், தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்' என, பதிவிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஆகியோர், வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள, 'வீடியோ' பதிவில், 'நமக்கான நல்ல வளம் மிகுந்த தமிழகத்தை, நாளை அமைப்போம். கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமான அரசாக, தி.மு.க., அரசு அமையும். இதுவே, என் பிறந்த நாள் வாழ்த்து செய்தி' என, கூறியுள்ளார்.
'கொலோன் பல்கலைக்கு நிதி அளிப்பது அவசியம்'
ஸ்டாலின் அறிக்கை: ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலையில் உள்ள, இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. இந்நிறுவனம், மிகத் தொன்மையான செம்மொழியான தமிழை கற்று, அதன் மீதான ஆர்வத்தால், ஜெர்மனி தமிழ் அறிஞர் பேராசிரியர் டாக்டர் க்ளவுஸ் லுட்விட் ஜெனரடால், 1963ல் துவங்கப்பட்டது.
இங்கு முனைவர் பட்டத்திற்கு, ஐந்து படிப்புகள் உட்பட, தமிழில் இளங்கலை படிப்பும் உள்ளது. ஆய்வு நிறுவன நூலகத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், ஓலைச் சுவடிகளும் இருப்பது தனிச்சிறப்பு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு நிறுவனம், நிதிப் பற்றாக்குறையால் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமைக்கு தக்க சின்னமாக உள்ள, இந்த ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட வசதியாக, கொலோன் பல்கலைக்கு, 1.24 கோடி ரூபாய் நிதி உடனே சென்றடைய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE