சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல், நேற்று துவங்கியது.
நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி, சட்டசபை தேர்தலில், முதல் முறையாக போட்டியிட உள்ளது. கட்சி துவக்கிய, ஓரே ஆண்டில், லோக்சபா தேர்தலை சந்தித்த கமல், ௩ சதவீதத்திற்கும் மேலான ஓட்டுகளை பெற்றார்.
இந்த தேர்தலில், முதல்வர் கனவோடு களத்தில் இறங்கியுள்ளார். நாளை முதல், அடுத்த கட்ட பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார். இந்நிலையில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், கமல் தலைமையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று துவங்கியது.
தேர்தல் களம் காண, விருப்ப மனு அளித்த, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை அழைத்து, கமல் தலைமையிலான தேர்வு குழுவினர் பேசினர். இதில், துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நேர்காணலில், வேட்பாளரின் சொத்து விபரம், தனித் திறன், கல்வி உள்ளிட்ட விபரங்களுடன், தேர்தலில் நிற்பதற்கான காரணம், ஊழல் செய்தால் வெளியேற்றப்படுவோம் என்ற உறுதிமொழி உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்ட, ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி துணை செயலர் உதயகுமார் தலைமையில், 60 பேர், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.
உதயகுமார் கூறுகையில், ''ரஜினி, கட்சி துவக்கி மாற்றத்தை தருவார் என, எதிர்பார்த்தோம். அவரால் முடியாததால், அவரது நண்பர் கமல் தருவார் என்ற நம்பிக்கையில் இணைந்தோம். எங்களது மாவட்டத்தில் இருந்த, 62 பேரில், 60 பேர், கமல் கட்சிக்கு வந்த விட்டோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE