சென்னை : தொகுதி பங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், அதிருப்தி அடைந்துள்ள, தே.மு.தி.க., தலைமை, 'சீட்' பேரத்தை அதிகரிக்க, 'டிராமா' போடத் துவங்கி உள்ளது. அக்கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகியும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ், தன் முகநுால் பக்கத்தில், 'தனித்து போட்டி' என்ற ரீதியில், 'காமெடி' செய்துள்ளார்.
'சட்டசபை தேர்தலில், பா.ம.க., இல்லாத கூட்டணியில், தே.மு.தி.க., இடம்பெற வேண்டும் என்பதே, தே.மு.தி.க.,வினரின் விருப்பம். அதை பரிசீலித்து முடிவு எடுப்போம்' என, அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, துணை செயலர் சுதீஷ் ஆகியோர் கூறி வந்தனர்.
முக்கியத்துவம்
இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க.,வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை, தே.மு.தி.க., தலைமை விரும்பவில்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தியை போக்க, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று, அவரை சந்தித்தனர்.
இதற்கிடையில், பா.ம.க., கேட்கும், 23 தொகுதிகளில், தே.மு.தி.க., செல்வாக்கு பெற்ற, 12 தொகுதிகள் இருக்கும் தகவல் தெரிய வந்தது. இது, அக்கட்சியினரை மேலும் சூடாக்கியுள்ளது. அதேநேரத்தில், தே.மு.தி.க.,விற்கு, 10 முதல், 12 தொகுதிகள் வரை தான் கொடுக்க முடியும் என, அ.தி.மு.க., தலைமை கை விரிக்கிறது.
இதுதொடர்பாக, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் தங்கமணி வீட்டில், நேற்று பேச்சு நடக்க இருந்தது. கூட்டணியில் சேர வேண்டுமானால், 24 தொகுதிகள் வேண்டும் என, தே.மு.தி.க., நிபந்தனை விதித்தது. இதற்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால், பேச்சுக்கு சம்மதம் என்றும் கூறப்பட்டது. அமைச்சர்களிடம் இருந்து, பதில் இல்லை. இதனால், நேற்று காலை நடக்க இருந்த பேச்சு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இழுபறி
இதனால் ஏற்பட்ட இழுபறிக்கு தீர்வு காண, ஆளும் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இன்று மாலைக்குள், உடன்பாட்டில் கையெழுத்திடும்படி, தே.மு.தி.க.,வுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. இச்சூழலில், கட்சி தலைவர் விஜயகாந்த் வீட்டில், நேற்று திடீர் ஆலோசனை நடந்தது. பிரேமலதா, சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன் பங்கேற்றனர். முக்கிய புள்ளி ஒருவர் வாயிலாக, தி.மு.க.,வுக்கு துாது அனுப்பியதாக கூறப்படுகிறது.
தற்போது, தி.மு.க., கூட்டணியில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, காங்., கட்சி அதிருப்தியில் உள்ளது. கூடுதல் தொகுதிகள் ஒதுக்காத பட்சத்தில், காங்., விலக வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், தி.மு.க., கூட்டணிக்குள் எளிதாக நுழைந்து விடலாம் என, தே.மு.தி.க., கணக்கு போடுகிறது.அதன் காரணமாகவே, பா.ம.க.,வை விட, ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என்பதில், தே.மு.தி.க., அடம் பிடிக்கிறது.
அதேநேரத்தில், அக்கட்சி துணை செயலரும், விஜயகாந்த் மைத்துனருமான சுதிஷ், நேற்றிரவு, தன் முகநுால் பக்கத்தில், விஜயகாந்த் படத்தை வெளியிட்டு, அதன் அருகில், 'நமது முதல்வர்' என, குறிப்பிட்டிருந்தார்.அதேபோல, கட்சி கொடி, சின்னம் படத்தை வெளியிட்டு, 'நமது கொடி; நமது சின்னம்' என, பதிவு செய்திருந்தார்.கூட்டணி பேச்சு நடந்து வரும் நிலையில், சீட் பேரத்தை அதிகரிக்க, இதுபோன்று கருத்து வெளியிட்டுள்ளதாகவும், 'தனித்து போட்டி' என, காமெடி செய்வதாகவும், அ.தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறது.
தனித்து நிற்கும் தகுதி - விஜயகாந்த் மகன் 'கெத்து'
''தே.மு.தி.க.,வுக்கு, 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் தகுதி உள்ளது,'' என, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
பெரம்பலுாரில் நேற்று நடந்த, அக்கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது: கடந்த, 2016ல் அ.தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் ஏற்பட்ட பிரச்னைக்கு, மக்கள் பிரச்னை குறித்து பேசியதே காரணம். மாற்றம் தேவை, அதை தே.மு.தி.க.,வால் மட்டுமே கொண்டு வர முடியும். வாரிசு இல்லாதவர்களே, வாரிசு அரசியல் பற்றி பேசுகின்றனர். தே.மு.தி.க., சுயம்புவாக ஆரம்பிக்கப்பட்டது. அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டும், 'ஜம்பிங் கேம்' விளையாடுகின்றன. சட்டசபையில், விஜயகாந்தின் குரல் மீண்டும் ஒலிக்கும். 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் எல்லா தகுதியும், தே.மு.தி.க.,வுக்கு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
வேட்பாளர் நேர்காணல் - தே.மு.தி.க., 6ல் துவக்கம்!
தே.மு.தி.க., வேட்பாளர் நேர்காணல், வரும், 6ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான நேர்காணல், வரும், 6ம் தேதி துவங்குகிறது.
அதன்படி, 6ம் தேதி காலை, கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களுக்கும்; மாலையில், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலுார் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடக்கவுள்ளது.அடுத்த நாள், 7ம் தேதி காலை, தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்; மாலையில், தஞ்சாவூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, நேர்காணல் நடக்கவுள்ளது.
வரும், 8ம் தேதி காலையில், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார், விழுப்புரம்; மாலையில், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கு, நேர்காணல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE