காரைக்கால், விழுப்புரம் கூட்டங்களில் பேசிவிட்டு, இரவில் சென்னை திரும்பினார் அமித் ஷா. கிண்டி ஓட்டலில் அவருக்காக காத்திருந்தனர், இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும்.
நள்ளிரவு தாண்டியும் ஆலோசனை நீடித்தது.
தமிழக நிலவரம் குறித்து, அமித் ஷா நிறைய தகவல்களை சேகரித்துள்ளார். மூன்று சர்வே முடிவுகளையும் கையோடு கொண்டு வந்திருக்கிறார். அவற்றை இருவரிடமும் கொடுத்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்.அ.தி.மு.க., கூட்டணிக்கு, 66 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்; 47 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி கிடைக்காது; இழுபறியில் உள்ள, 121 தொகுதிகளில் சரியாக திட்டமிட்டு கடினமாக உழைத்தால், கணிசமானதை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது என்பது, சர்வேக்களின் சாராம்சம்.
கசப்பாக தோன்றிய விஷயம்
'ஒரு மாத அவகாசம் இருக்கிறது. அதற்குள் பல காரியங்களை நம்மால் செய்ய முடியும். பிரதமர் பலமுறை தமிழகம் வரவிருக்கிறார். மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், நட்சத்திரங்கள் என, படையே அணிவகுத்து வரும். மக்கள் மனதில் நிச்சயமாக இடம் பிடித்து விடலாம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அமித் ஷா நம்பிக்கை அளித்திருக்கிறார். அடுத்து அவர் சொன்னது தான் இருவருக்கும் கசப்பாக தோன்றிய விஷயம்.'அ.ம.மு.க.,வுக்கு செல்வாக்கு இல்லை. ஆனால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பை பரவலாக பாதிக்கும் அளவில், அது செயல்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதோடு சமாதானமாக போவது நல்லது. கூட்டணியில் சேர்க்கலாம்.
'உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், எங்களுக்கு கூடுதல் தொகுதி தாருங்கள், அதில் இருந்து கொடுக்கிறோம். தி.மு.க.,வை தடுக்க இந்த ஏற்பாடு அவசியம் என தோன்றுகிறது' என, உள்துறை அமைச்சர் சொன்னதை, இருவரும் ரசிக்கவில்லை.காலையில் அடையாறு ஓட்டலில் நடந்த, பா.ஜ., -- அ.ம.மு.க., - ரகசிய சந்திப்பில் இந்த யோசனை உருவாகி, தினகரன் சம்மதம் தெரிவித்த தகவல், முன்பே அவர்களுக்கு கிடைத்திருந்தது. இ.பி.எஸ்., 'ஓப்பனாக' சொன்னாராம். 'அதற்கான அவசியமே இல்லை.
நாங்களும் சர்வே எடுத்திருக்கிறோம். நம் கூட்டணி, 156 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். புதிதாக யாரும் தேவையில்லை' என்று கூறி, ஒரு, 'பைல்' காட்டினார். மேலோட்டமாக பார்த்த அமித் ஷா, உடன்பாடு இல்லை என்பதை தலை அசைவால் உணர்த்தி விட்டு அடுத்த, 'சப்ஜெக்ட்'டுக்கு' வந்தாராம்.
'எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகள் லிஸ்டில், மயிலாப்பூர், ஸ்ரீரங்கம், ராஜபாளையம், துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலுார், கிருஷ்ணகிரி, ஓசூர், தஞ்சாவூர், கும்பகோணம், வேளச்சேரி, குன்னுார், கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, திருத்தணி ஆகியவை அடங்கி இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்' என, அவர் சொன்னதும் இரட்டையர்கள்
பதறி போனார்களாம்.
'அதில் பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ரெடி; வேலையும் ஆரம்பித்து விட்டனர்' என்று கூறியுள்ளனர்.'சரி, தமிழக பா.ஜ., தலைவர்களுடனும், மேலிடப் பொறுப்பாளர்களுடனும் பேசி நல்ல முடிவு எடுங்கள்' என, முடித்து கொண்டாராம் ஷா. ஆலோசனையில் மொழி பெயர்த்தவர் கர்நாடக மாநில பா.ஜ., நிர்வாகி பி.எல்.சந்தோஷ்.
பேச்சு முடிந்த போது, நள்ளிரவு மணி 1:00. அதன் பிறகு, தனி விமானத்தில் டில்லிக்கு புறப்பட்டார் உள்துறை அமைச்சர்.
33 வாங்கி சசிக்கு 18?
பா.ஜ.,வுக்கு, 33 இடங்களை அ.தி.மு.க., கொடுத்தால், அதில் பாதிக்கு மேல் (18) அ.ம.மு.க.,வுக்கு பிரித்து கொடுக்க தயார் என, அமித் ஷா கூறியதாக ஒரு தகவல் சுற்றுகிறது.
தமிழக பா.ஜ., வட்டாரத்தில் அதை மறுக்கின்றனர். 'அந்த கட்சிக்கு ஆங்காங்கே ஓட்டுகள் இருக்கலாம். அதற்காக எங்களுக்கு சமமாக எடை போடாதீர்கள்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE