இடைப்பாடி தொகுதியில், மீண்டும் போட்டியிடுகிறார், முதல்வர் இ.பி.எஸ்., கடந்த தேர்தலில், அவருக்கு, 98,703 ஓட்டு கிடைத்தது. அடுத்த இடத்தில், பா.ம.க,,வுக்கு, 56,681, மூன்றாம் இடத்தில், தி.மு.க.வுக்கு, 55,149 கிடைத்தன.அடுத்தடுத்து இரண்டு முறை தன்னை தேர்ந்து எடுத்த மக்களுக்கு நிறையவே செய்திருக்கிறார், பழனிசாமி. எனவே, வெற்றி உறுதி என்று சொல்லலாம்.
'டஃப் பைட்'
என்றாலும் அவரை எதிர்த்து போட்டியிட, தி.மு.க., நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவருக்கு அடுத்து வந்த, பா.ம.க., இப்போது, அவர் கூட்டணியில் சேர்ந்து விட்டது. இந்த தேர்தலிலும் பரிதாபமாக தோற்றால், பெரிய அவமானம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், 'டஃப் பைட்' கொடுக்க ஆள் தேடி வந்தார். 2019 லோக்சபா தேர்தலில், இடைப்பாடி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் அ.தி.மு.க.,வை விட கூடுதலாக, 8,088 ஓட்டு வாங்கியது, அவருக்கு சின்ன நம்பிக்கையை தருகிறது.
சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வ கணபதிக்கு செல்வாக்கு உண்டு. அவரை நிறுத்தினால் வெற்றி பெறவும், 'சான்ஸ்' உண்டு என, தி.மு.க.,வினர் நம்புகின்றனர். ஆனால், சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அவர் போட்டியிட முடியாது. செல்வ கணபதியின் மனைவி பாப்பு, போட்டியிட்டால் முதல்வருக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம் என, ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டது. அந்த யோசனைக்கு கட்சியினர் ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய, சமூக வலைதளங்களில் செய்தி கசிய விட்டார்.
'சபாஷ் தலைவா, சரியான திட்டம்' என, உ.பி.,க்கள் ஆரவாரம் செய்தனர். திருப்தியான ஸ்டாலின், அவரை சென்னைக்கு வரவழைத்து, விருப்ப மனு பெற்றுள்ளார். அவருக்கு மாற்றாக, பொதுக்குழு உறுப்பினர், கொங்கணாபுரம் சுப்ரமணியத்தையும் தயாராக இருக்கும்படி கூறியுள்ளார். பாப்பு மனு குறித்து செல்வ கணபதியின் கருத்தை கேட்டோம். 'அப்படி ஒரு ஐடியாவே கிடையாது' என, ஒரே வரியில் முடித்து கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE