காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், தொடர்ந்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால், வெகு விரைவில் காங்கிரசில் பிளவு ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். நீண்ட இழுபறிக்குப் பின், அவரது தாய் சோனியா, தற்காலிகமாக மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்றார். கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை என, பலமுறை விவாதிக்கப்பட்டும், எந்த முடிவும் ஏற்படவில்லை. தற்காலிக தலைவராக சோனியா தொடர்கிறார்.

இதற்கிடையே, கட்சியில் பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல் எதிரொலிக்கத் துவங்கியது.
மத்திய பிரதேசத்தில், ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி, பா.ஜ.,வில் இணைந்தார். அதனால், அங்கு ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. ராஜஸ்தானில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், அதிருப்தியை வெளிப்படுத்தினார். தற்காலிகமாக அவர் சமாதானப்படுத்தப்பட்டார். ஆனாலும், அங்கு பிரச்னை, நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உட்பட, 23 மூத்த தலைவர்கள், கட்சிக்கு நிரந்தரத் தலைமையின் அவசியம் குறித்து, சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இது குறித்து விவாதிக்கப்பட்டாலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.இதற்கிடையே, இந்த மூத்த தலைவர்கள், கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர். குலாம் நபி ஆசாதின், ராஜ்யசபா எம்.பி., பதவி முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கு மறுவாய்ப்பு தரப்படவில்லை. அதனால், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, அவர் இழந்தார்.
இந்நிலையில், தமிழகம், மேற்கு வங்கம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் தொடர்பான எந்த ஆலோசனைக்கும், இந்த தலைவர்கள் அழைக்கப்படவில்லை; அவர்களது ஆலோசனையும் கேட்கப்படவில்லை.இதையடுத்து, இந்த மூத்த தலைவர்கள், கட்சிக்கு எதிரான தங்கள் கொந்தளிப்பை, வெளிப்படையாக பேசத் துவங்கிஉள்ளனர். 'கட்சி அழிவதை சகித்து கொள்ள முடியாது' என, குலாம் நபி ஆசாத், வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். பிரதமர், நரேந்திர மோடியை பாராட்டியும், அவர் பேசியுள்ளார்.
மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த சர்மா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், நேற்று இரண்டு செய்திகளை பதிவு செய்துள்ளார். மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐ.எஸ்.எப்., எனப்படும், இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் காங்., கூட்டணி அமைத்துள்ளது. முஸ்லிம் மதத்துடன் தொடர்புடைய, ஐ.எஸ்.எப்., அமைப்புடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு, ஆனந்த் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தன் பதிவுகளில், ஆனந்த் சர்மா கூறியுள்ளதாவது:ஐ.எஸ்.எப்., போன்ற அமைப்புடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது, கட்சியின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது. மதச்சார்பின்மை, காந்தியக் கொள்கைகள், நேருவின் மதச்சார்பின்மைக்கு முரண்பாடானது, இந்தக் கூட்டணி. இது குறித்து, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கவில்லை.
மதவாதத்துக்கு எதிரான கொள்கையில், பாகுபாடு இருக்கக் கூடாது. மதவாதம் எந்த வகையில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். ஆனால், மேற்கு வங்க காங்., தலைவர், மதவாதத்துக்கு ஆதரவாக இருப்பது, அவமானமாக இருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராகுல் பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார். மத்திய அரசில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சர் இல்லை என்பது போன்ற பொய்க் கருத்துக்களை கூறி, பலரது விமர்சனத்தை சம்பாதித்து வருகிறார். எந்த மூத்த தலைவர்களும், முக்கியத் தலைவர்களும், எந்த மாநிலத்திலும் பிரசாரத்துக்கு அழைக்கப்படவில்லை. தன்னை தனிப்பட்ட முறையில் விளம்பரபடுத்திக் கொள்வதற்காகவே மட்டுமே, இந்தத் தேர்தல்களை ராகுல் பயன்படுத்துவதாக, மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும், கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு இல்லாமல் அவர் செயல்படுவதாகவும், இந்த மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.'சாலையோர கடைகளில் டீ குடிப்பது, இளநீர் குடிப்பது போன்ற நாடகங்களுடன், பிரசார கூட்டத்தின்போது நடனம் ஆடுவது போன்ற, சுய விளம்பரப் பிரியராக, ராகுல் இருப்பது, கட்சியை அழிவை நோக்கி எடுத்துச் சென்று விடும்.
மேற்கு வங்கத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையை, இங்கு வந்து பிரசாரம் செய்தால் தான் தக்க வைக்க முடியும். அதை விடுத்து எதற்கு தமிழகத்தில் நாடகம் நடத்துகிறார்' என, ஆனந்த் சர்மா, மனம் புழுங்குகிறார். அந்த வேதனையின் வெளிப்பாடே, இந்த வெளிப்படை கருத்துக்கள். நிலைமை தொடர்ந்தால், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்த மூத்த தலைவர்கள் வெளியேறி, கட்சி பிளவுபடும் அபாயம் உள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE