கோல்கட்டா : ''மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவளிக்கும்,'' என, அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இம்மாநில சட்டசபை தேர்தல், வரும் 27ல் துவங்கி, அடுத்த மாதம் 29 வரை, எட்டு கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.
![]()
|
பீஹார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ், நேற்று கோல்கட்டா வந்தார்.காளி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், முதல்வர் மம்தா பானர்ஜியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசினர்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா, மேற்கு புர்த்வான் மற்றும் கோல்கட்டாவின் சில பகுதிகளில், பீஹாரைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதையடுத்து, மேற்கு வங்கத்தில், 10 - 12 தொகுதிகள் வரை, ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மம்தாவை சந்தித்த பின், தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்.,குக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். பா.ஜ.,வின் பிடியில் இருந்து, நாட்டை காப்பாற்றுவதே எங்கள் நோக்கம்.
மேற்கு வங்க தேர்தலுக்காக மட்டும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
பீஹாரில், பா.ஜ.,வின் மோசடியால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோற்கடிக்கப்பட்டது. விரைவில் அவர்கள் ஆட்சியை பிடிப்பர். பீஹாரில், தே.ஜ., கூட்டணி அரசு நீடிக்கப் போவதில்லை; மேற்கு வங்கத்திலும் வெற்றி பெறப் போவதில்லை. பா.ஜ.,வின் அதிகாரத்திற்கு அடிபணியாமல், தேர்தல் கமிஷன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE