உடன்பிறப்பு உள்குத்து துவங்கியாச்சு: வடக்கை கேட்கிறது காம்ரேடு கட்சி| Dinamalar

உடன்பிறப்பு உள்குத்து துவங்கியாச்சு: வடக்கை கேட்கிறது 'காம்ரேடு ' கட்சி

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | |
அவிநாசி லிங்கேஸ்வரரை தரிசிக்கச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் கோவையை நோக்கி, திரும்பிக் கொண்டிருந்தனர். ஸ்டிரைக் முடிந்ததால், நிறைய அரசு பஸ்களை பார்க்க முடிந்தது.''ஸ்டிரைக் நடக்கும்போது வாழைப்பழத்துனால, ஏதோ பிரச்னையாமே, பஸ் ஸ்டாண்ட்டுல பேசிக்கிட்டாங்க,''''அதுவா, ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருத்தரு, வீட்டுல இருந்து வாழைப்பழம்
 உடன்பிறப்பு உள்குத்து துவங்கியாச்சு: வடக்கை கேட்கிறது 'காம்ரேடு ' கட்சி

அவிநாசி லிங்கேஸ்வரரை தரிசிக்கச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் கோவையை நோக்கி, திரும்பிக் கொண்டிருந்தனர். ஸ்டிரைக் முடிந்ததால், நிறைய அரசு பஸ்களை பார்க்க முடிந்தது.

''ஸ்டிரைக் நடக்கும்போது வாழைப்பழத்துனால, ஏதோ பிரச்னையாமே, பஸ் ஸ்டாண்ட்டுல பேசிக்கிட்டாங்க,''

''அதுவா, ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருத்தரு, வீட்டுல இருந்து வாழைப்பழம் கொண்டு வந்தாரு. சுங்கம் டிப்போவுக்கு முன்னால இருந்த சக பணியாளர்களுக்கு கொடுத்தாரு. நட்பு ரீதியா, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவருக்கும் கொடுத்திருக்காரு. அச்சங்கத்தை சேர்ந்தவங்க, தப்பா புரிஞ்சுக்கிட்டு, பிரச்னையை திசை திருப்பிட்டாங்க. இந்த பிரச்னையில, மூணு பேரை 'டிரான்ஸ்பர்' செஞ்சதுதான் மிச்சம்

''தேர்தல் பிரசாரத்துக்கு, பிரதமர் மோடியே வந்துட்டு போயிருக்காரே, களம் எப்படியிருக்கு,'' என, நோண்டினாள் மித்ரா.

''பி.ஜே.பி.,காரங்க தெம்பா இருக்காங்க. தமிழக தேர்தலில் மோடியும், அமித்ஷாவும் கூடுதல் கவனம் செலுத்துறதுனால, எப்படியும் சட்டசபைக்குள் நுழைஞ்சிடலாம்னு நம்பிக்கையா இருக்காங்க,''

''நம்ம மாவட்டத்துல, தி.மு.க., கூட்டணியில, இரு கம்யூ., கட்சிக்கும் தலா ஒரு 'சீட்' கொடுக்கறதுக்கு தலைமை சம்மதம் சொல்லியிருக்காம். அதனால, அ.தி.மு.க., கூட்டணியில மூணு தொகுதியை பா.ஜ., கேட்குதாம். குறிப்பா, கோவை தெற்கு, வடக்கு, கவுண்டம்பாளையத்தை கேட்குறாங்களாம்,''

''ஆனா, ஆளுங்கட்சி தரப்புல, வடக்கு தொகுதியை விட்டுக்கொடுக்க தயாரா இருக்காங்களாம். தெற்கையும், கவுண்டம்பாளையத்தையும் தாரைவார்க்க தயாரில்லையாம். இதுக்கு பதிலா, சிங்காநல்லுார், சூலுாரை தள்ளி விட நினைக்கிறாங்களாம்,''

''ஏன்னா, தி.மு.க., கூட்டணியில சிங்காநல்லுாரை கம்யூ., கட்சியும், சூலுாரை காங்கிரஸ் கட்சியும் கேட்குதாம். அதை காரணமா சொல்லி, பா.ஜ.,வுக்கு ஒதுக்கி, தேசிய கட்சிகள் நேருக்கு நேரா போட்டி போடுங்கன்னு சொல்றாங்களாம்,''

''கமல் கட்சியும் மையம் கொள்ளப் போகுதாமே,''

''அதுவா, கட்சி துவங்கிய உடனே, பாராளுமன்ற தேர்தலை சந்திச்சாங்க. மய்ய வேட்பாளருக்கு, 1.38 லட்சம் ஓட்டு விழுந்துச்சு; இவ்ளோ ஓட்டு கிடைக்கும்னு அவுங்களே எதிர்பார்க்கலை,''

''ஒரு மாசத்துக்கு முன்னாடி, நம்மூர்ல கமல் திறந்தவெளி வேனில் பிரசாரம் செஞ்சப்போ, ஏகப்பட்ட கூட்டம் கூடுச்சு; வரவேற்பும் நல்லா இருந்ததுனால, தெற்கு தொகுதியில், கமல் போட்டியிட்டா, ஈஸியா ஜெயிக்கலாம்னு, கணக்கு போடுறாங்க,''

''தி.மு.க.,விலும் உள்குத்து வேலை நிறைய நடக்குதாமே,''

''அரசியல்ல இதெல்லாம் நடக்கத்தானே செய்யும். ஆளுங்கட்சியினருடன் நெருக்கமா இருந்தாங்கன்னு சொல்லி, கருணாநிதியிடமும், ஸ்டாலினிடமும் நேருக்கு நேரா பேசியவங்களை கூட, ஓரங்கட்டி வச்சிருக்காங்க.

''மறுபடியும் 'சீட்' வாங்கிடக் கூடாதுங்கிறதுக்காக, கம்யூ., கட்சிக்காரங்களை உசுப்பேத்தி விட்டு, வடக்கு தொகுதியை கேட்க வச்சிருக்காங்க. சொல்லி வச்ச மாதிரி, ரெண்டு கம்யூ., கட்சிக்காரங்களும், வடக்கு தொகுதியை விரும்பி கேட்குறாங்கன்னா, உள்குத்து செய்றது யாருன்னு தெளிவா தெரியும்,''

''அதெல்லாம் இருக்கட்டும். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியும், அமைச்சர் சகோதரரும், ஒரே சோபாவுல உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி புகைப்படம், சமூக வலைதளத்துல பரவிட்டு இருக்கே,''

''ஆமாப்பா, எனக்கும் வந்துச்சு. சேனாதிபதி இல்ல நிகழ்வுக்கு வந்துட்டு போன, பழைய புகைப்படம். சேனாதிபதியை கட்சி பொறுப்பாளரா நியமிச்சதுல இருந்து, அ.தி.மு.க.,வுக்கு 'நெருக்க'மானவருன்னு பிரச்னை ஓடிட்டு இருக்கு.'சீட்' ஒதுக்குற நேரத்துல, சமூக வலைதளத்துல போட்டோவை பரவ விட்டிருக்காங்க.

இது, உடன்பிறப்புகள் செஞ்ச வேலையா? அல்லது, ஆளுங்கட்சிக்காரங்க கைங்கரியமான்னு கட்சிக்காரங்க அலசிக்கிட்டு இருக்காங்க,'' என்றபடி, நீலாம்பூர் மேம்பாலத்தின் மீது, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

''ஆளுங்கட்சி தரப்புல முட்டல் மோதல் நடந்திட்டு இருக்காமே,'' என, கேட்டாள் மித்ரா.''அதுவா, வி.ஐ.பி., குடும்பத்துக்கும், கரன்சி வரக்கூடிய கோப்புகளை கையாள்ற நிர்வாகிக்கும் மோதல் வெடிச்சிருக்காம். தேர்தலுக்கு முன்னாடி, பெருசா வெடிக்கும்னு பேசிக்கிறாங்க,''

''மித்து, தேர்தல் முடிவு எப்படி வேணும்னாலும் வரலாங்கிறதுனால, ரொம்பவே ஷார்ப்பா யோசிச்சு ரெடியா இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சுந்தராபுரம் ஏரியாவுல இருக்குற, பிரபலமான ஆஸ்பத்திரியில, ஒருத்தரு தற்கொலை செஞ்சுக்கிட்டாரு. இயற்கை மரணம் மாதிரி காண்பிச்சு, மர்மத்தை புதைச்சிட்டாங்க,''

''யாரு, அவரு, முக்கியமான புள்ளியா,'' என, அப்பாவியாய் கேட்டாள் மித்ரா.

''முக்கியமான புள்ளிக்கு நெருங்கிய உறவுக்காரராம். அவரது பெயரில், பினாமி சொத்துகள் ஏகத்துக்கும் இருக்குதாம். உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்காரு. டிரீட்மென்ட்டுல இருந்தப்போ, தற்கொலை செஞ்சுக்கிட்டாராம். பிரச்னை வெளியே வராம, மூடி மறைச்சிட்டாங்களாம்,''

''அரசியல்வாதிகள் நினைச்சா, என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கே,''என்ற சித்ரா, 'சிட்ரா' எதிரிலுள்ள பேக்கரியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.காபி, காளான் பப்ஸ் ஆர்டர் கொடுத்து வாங்கிய மித்ரா, பப்சை ருசித்தபடி, ''அக்கா, அரசு துறையில மூணு வருஷத்துக்கு மேலே, ஒரே இடத்துல வேலை பார்க்குறவங்களை, 'டிரான்ஸ்பர்' செய்யணுங்கிறது, 'ரூல்'. ஆனா, மாவட்ட நிர்வாகத்துல இன்னும் அதிகாரிகளை மாத்தாம இருக்காங்க,'' என்றாள்.

''மித்து, தேர்தல் தேதி அறிவிச்சதை, அரசு உயரதிகாரிகளே எதிர்பார்க்கலையாம். நம்மூர்ல ஏகப்பட்ட இடங்கள்ல இன்னும் ஓட்டுச்சாவடிகளே தயார் ஆகலையாம். வேட்பு மனு தாக்கலுக்கும், ஓட்டுப்பதிவுக்கும் இடையே, 24 நாள் தான் இடைவெளி இருக்கு. என்ன செய்றதுன்னு தெரியாம, அதிகாரிங்க, புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.

''ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரிகளுக்கு, ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்திருக்கறதா, கேள்விப்பட்டேனே''

''யெஸ், உண்மைதான்! வேண்டப்பட்ட அதிகாரிகளை, வேண்டப்பட்ட போஸ்ட்டிங்கில் நியமிச்சிருக்காங்க. என்ன செய்யணும்ங்கிற உத்தரவு, 'பர்சனல்' மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ்அப்' அழைப்பில் வருமாம்,'' என்றபடி, பேக்கரியில் இருந்து வெளியே வந்த சித்ரா, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

''போலீஸ் டிபார்ட்மென்ட்டுல இன்னும் சிலரை, 'டிரான்ஸ்பர்' செய்யாம இருக்காங்களாமே,'' என, நோண்டினாள்.

''ஆளுங்கட்சிக்கு விசுவாசமா இருக்கறவங்களை, பாதுகாப்பான இடமா பார்த்து, மாத்தியிருக்காங்க. சிலரை, 'டிரான்ஸ்பர்' செய்யாம இருக்காங்களாம். ஆளுங்கட்சியால் பாதிக்கப்பட்டவங்க ஒரு கோஷ்டியா உருவாகி இருக்காங்களாம். நேர்மையா வேலை செய்ற போலீஸ்காரங்க, என்ன செய்றதுன்னு தெரியாம புலம்பிட்டு இருக்காங்க,''

''ஆமாக்கா, நீங்க சொல்றதும் சரிதான். பொருளாதார குற்றப்பிரிவு போலீசுல, அஞ்சு வருஷமா இருக்குற ரெண்டு போலீஸ்காரங்களுக்கு, ஆறு மாசத்துக்கு முன்னாடியே, 'டிரான்ஸ்பர்' ஆர்டர் வந்துருச்சாம்; இன்னும் மாறாம, இங்கேயே இருக்காங்க. இந்த பிரிவுக்கு டி.எஸ்.பி.,யே நியமிக்காம இருக்காங்க. ஈரோட்டுக்காரர் தயவுல, டிரான்ஸ்பர் செஞ்ச இடத்துக்கு போகாம இருக்காங்க,''

''காசு புழங்குற இடத்துல இருந்து வெளியே போறதுக்கு, அவ்ளோ ஈஸியா மனசு வந்துருமா, என்ன,'' என்ற சித்ரா, ''இளைஞர் சமுதாயமே போதை கலாச்சாரத்துல தடம் மாறி போகுதாமே,'' என, அங்கலாய்ப்புடன் கேட்டாள்.

''ஆமாக்கா, சுண்டக்காமுத்துார், காளம்பாளையம், மாதம்பட்டி, ஆலாந்துறை ஏரியாவுல, கஞ்சா விற்பனை ஜோரா நடக்குது. போதைக்கு அடிமையாகுற இளைஞர்களுக்கு, 'லெட்டர்பேடு' கட்சிக்காரங்க நேசக்கரம் நீட்டி, கரன்சி கொடுக்குறாங்க,''

''பிரதி உபகாரமா, மது சில்லிங், மூணு நம்பர் லாட்டரி விக்கிறவங்களை மிரட்டி, பணம் பறிக்கறதுக்கு பயன்படுத்துறாங்க. சில போலீஸ்காரங்களும் உடந்தையா இருக்காங்களாம்,'' என்ற மித்ரா, ''ஒரு போஸ்ட்டிங்கிற்கு, 30 லகரம் முதல், 40 லகரம் வரை வசூலிக்கிறாங்களாம்,'' என, பொடி வைத்து கேட்டாள்.

''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். உனக்கு தெரிஞ்சு போச்சா,'' என்ற சித்ரா, ''அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில விரிவுரையாளர் பணியிடத்தை நிரப்புறதுக்கு, கடைசி நேரத்துல, கவர்மென்ட் பர்மிஷன் கெடைச்சிருக்கு. போஸ்ட்டிங்கை நிரப்புறதுக்கு லட்சக்கணக்குல கேட்குறாங்களாம்; அதுல, ஒரு பங்கு, ஆளுங்கட்சிக்கு போகுதாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும். பாரதியார் பல்கலையில் கல்வெட்டு வச்சதுல, சர்ச்சை ஓடிட்டு இருக்குதாமே,''

''ஆமா, மித்து! புதுசா கட்டியிருக்கிற நாலு மையத்துல கல்வெட்டு வச்சிருக்காங்க. உயர் கல்வித்துறையிலும், 'சிண்டிகேட்'டிலும் அனுமதி வாங்காம, முறைகேடு புகார் உள்ளவங்க பெயரை, கல்வெட்டுல பொறிச்சது, பேராசிரியர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு,'' என்றபடி, கலெக்டர் ஆபீசை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X