நாகர்கோவில் : ''தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் உடைமைகள் வெறும் ஒரு சூட்கேசில் அடங்கியதை படித்து நெகிழ்ந்து போனேன். காமராஜர் காலம் மீண்டும் தமிழகத்தில் பிரதிபலிக்க வேண்டும்'' என்று காங்., எம்.பி., ராகுல் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மற்றும் மார்த்தாண்டம் பிரசாரத்தில் அவர் மேலும் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தல் சவாலானது. மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழ் மொழி, தமிழக கலாசாரத்தையும் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறது. தமிழக மக்கள் தான் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பார்கள். தமிழகத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத முதல்வர் வேண்டும். தமிழகத்தின் முக்கிய விஷயம் வேலை வாய்ப்புதான்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பலரது வேலைவாய்ப்பை கெடுத்துள்ளது. புதிய விவசாய சட்டம் விவசாயிகள் வாழ்வை ஒழிக்கும் வகையில் உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய விவசாயம், சிறு தொழில்களை பாதுகாக்கும் ஒரு அரசாங்கம் வேண்டும். தமிழகத்துக்கு போராடும் ஒரு முதல்வரும், பா.ஜ.,வின் சுரண்டலில் இருந்து மக்களை காப்பாற்றும் அரசும் வேண்டும்.
எல்லா மதமும் ஒன்றுதான் என்ற கொள்கைதான் தமிழகத்தை வலுப்படுத்துகிறது. இதை பிளவுப்படுத்த அனுமதிக்க மாட்டோம்.குமரி மாவட்ட மக்களுக்கும் எங்களுக்கும் ஒரு நல்ல குடும்ப உறவு இருந்து கொண்டிருக்கிறது. என் பாட்டி, தந்தை ராஜிவ் காலம் முதல் என்காலம் வரை குமரி மக்கள் அன்பை பொழிகிறீர்கள். இதற்கு கடமைபட்டுள்ளேன்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE