சென்னை : அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, நேற்று இரண்டாவது நாளாக, தொகுதி பங்கீடு பேச்சு நடந்தது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்து, பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கி உள்ளது.
சென்னை வந்த,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினர்.இரவு, 10:00 மணிக்கு துவங்கிய சந்திப்பு, நள்ளிரவு, 1:00 மணிக்குநிறைவடைந்தது.
அப்போது, பா.ஜ., தரப்பில், 40 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது; அ.தி.மு.க., தரப்பில், 18 தொகுதிகள் தருவதாக கூறப்பட்டு, பின், 20 ஆக உயர்த்தி உள்ளனர். தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்ட போதும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில், கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும், அ.தி.மு.க.,விற்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, பா.ஜ., கேட்டதாக கூறப்படுகிறது. இதில், இழுபறி ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்டணியில், அ.ம.மு.க.,வை சேர்க்க, அமித்ஷா வலியுறுத்தியதாகவும், தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று காலை, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., மற்றும் மூத்த அமைச்சர்கள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வந்தனர். அமித்ஷாவுடன் நடந்த பேச்சு குறித்து, ஒரு மணி நேரம் ஆலோசித்தனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, நட்சத்திர ஓட்டலில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, இரண்டாம் நாளாக, தொகுதி பங்கீடு பேச்சு நடந்தது.
தமிழக பா.ஜ.,தலைவர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலர் கேசவவிநாயகன், மாநில துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., தரப்பில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். ஒரு மணி நேர பேச்சுக்கு பின், ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE