பல்வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும் கூட, தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதும், கிறிஸ்தவர்களின் குரலை எதிரொலிக்க சட்டசபை, பார்லிமென்டில் போதுமான பிரதிநிதிகள் இல்லை என்பதும், கிறிஸ்தவர்களின் ஆதங்கம்.
'இங்கே எந்த தலைவரும், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இல்லை; ஆனால், கிறிஸ்தவர்களின் ஓட்டு மட்டும் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்' என, குமுறுகிறார், தமிழக பா.ஜ., சிறுபான்மை பிரிவு செயலர் கல்வாரி தியாகராஜன்.

அவர் சொல்கிறார்...
திராவிட கட்சிகளின் ஆட்சியில், கிறிஸ்தவர்களுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அக்கட்சிகள் கிறிஸ்தவர்களை ஊறுகாய் போன்று, தேர்தலில் ஓட்டுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன. பேராயர்களும், மத குருமார்களும் தான், கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகள் என, அவர்கள் தவறாக நினைத்து கொண்டு இருக்கின்றனர்.சில பாதிரியார்களும், அவர்களின் அமைப்புகளும் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. அந்த பணத்துக்கு கணக்கு காட்டுமாறு வரித் துறை கேட்கிறது. எனவே, அவர்களுக்கு பிரதமர் மோடியையும் பா.ஜ.,வையும் பிடிக்கவில்லை. மோடிக்கு எதிரான கருத்துக்களை கிறிஸ்தவர்கள் மத்தியில் பரப்புகின்றனர். நாத்திகம் பேசும், தி.மு.க.,வை ஆதரிக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் அனைவருமே மோடிக்கும், பா.ஜ.,வுக்கும் எதிரானவர்கள் என்பது போல் சித்தரிக்கின்றனர்.முஸ்லிம்களுக்காக கட்சிகள் இருக்கின்றன. அவை ஏதாவது ஒரு திராவிட கட்சி கூட்டணியில் சேர்ந்து, எம்.எல்.ஏ.,க்களை பெற்று விடுகின்றன. எல்லா கட்சியிலும் திறமையான கிறிஸ்தவர்கள் இருந்தாலும், அவர்களை அங்கீகரிப்பது இல்லை. மத்தியில், தி.மு.க., ஆதரவுடன் காங்., தலைமையில் கூட்டணி ஆட்சி இருந்த போது, தமிழகத்திலிருந்து ஏழு பேர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஒருவர் கூட கிறிஸ்தவர் இல்லை.

ஆனால், கேரளாவில், எம்.பி.,யே இல்லாத போதும், ஒரு கிறிஸ்தவரை மத்திய அமைச்சர் ஆக்கினார், மோடி.கிறிஸ்தவ அமைப்புகள் எல்லாமே, சமூக அமைப்புகளாக இயங்குகின்றன. அரசியல்ரீதியாக இயங்கவில்லை. இந்த உண்மை, பா.ஜ.,வுக்கு மட்டும் தான் தெரிகிறது; வடகிழக்கு மாநிலங்கள், கோவா போன்ற மாநிலங்களில், பா.ஜ.,வில் கிறிஸ்தவர்கள் பலர், எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக இருக்கின்றனர். இதனால், அங்குள்ள கிறிஸ்தவர்கள், பா.ஜ.,வை கொண்டாடுகின்றனர்.பா.ஜ., கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்பது, பொய் பிரசாரம் என்பதை உணர்ந்துள்ள என் போன்ற கிறிஸ்தவர்கள், பா.ஜ.,வை ஆதரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE