உலகின் முதல், 'ஆற்றல் தீவு' ஒன்றை டென்மார்க் உருவாக்கி வருகிறது. மனித முயற்சியால் கட்டப்படும் தீவான இதில், பெரிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன.இந்த காற்றாலைகள் மட்டும், 30 லட்சம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக இருக்கும் என, டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.
டென்மார்க் அரசு, 51 சதவீதமும், தனியார் நிறுவனங்கள், 49 சதவீதமும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றன. வரும், 2030ல் நிறைவடையவுள்ள, ஆற்றல் தீவின் பரப்பளவு, 30 ஏக்கராக இருக்கும். டென்மார்க் அரசு, அதன் வரலாற்றிலேயே இத்தனை பெரிய திட்டத்தை மேற்கொண்டதில்லை.கடலுக்கு நடுவே மிதக்கும் காற்றாலைகளை அமைப்பது, ஐரோப்பிய நாடுகளின் பிரியத்திற்குரிய திட்டமாக இருந்து வருகிறது.பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் மிதக்கும் காற்றாலைகளை பெருமளவில் அமைத்து வருகின்றன.
ஆனால், ஒரு பெரிய செயற்கை தீவினை இதற்கென அமைப்பது இதுவே முதல் முறை.ஆற்றல் தீவு முழுமையாக செயல்படும்போது, 12 ஜிகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். உபரி மின்சாரத்தை, டென்மார்க் தன் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யவிருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE