புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது தொடர்பாக நிதியமைச்சகம் தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை அதிகளவு உயர்ந்துள்ளது, பொது மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. இதனை குறைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் மீதான விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதியில் 3வது இடத்தில் இந்தியாவில் மொத்த விலையில் 60 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், வரியை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகள், எண்ணெய் அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அரசின் நிதி நிலைமை பாதிக்காத வகையில், வரியை குறைப்பது தொடர்பாக சுமூக முடிவு எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் மீதான விலையை ஸ்தரமாக வைத்துள்ளது குறித்து ஆலோசனை நடக்கிறது. மார்ச் மாத மத்தியில் முடிவு எடுக்கப்படும். வரி குறைப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன்னர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலைபெற வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. மீண்டும் மீண்டும் வரிகளை மாற்றி அமைக்கப்படுவதை விரும்பவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர்பாக, ஓபெக் எனப்படும் எண்ணெய் வள உற்பத்தி நாடுகள் ஆலோசனை நடத்த உள்ளன. இதில், உற்பத்தியில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் பிறகு, விலை நிலைபெறும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE