புதுடில்லி : ஒரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் சமையல் காஸ் விலையோ இன்னும் அதிகமாகி வருகிறது. இதை மோடியின் வரி என டுவிட்டர் வலைதளவாசிகள் கிண்டல் செய்வதால் #ModiTax என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. இதன் உடன் மத்திய, மாநில அரசுகளின் வரியும் சேர்ந்து கொள்ளும். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே பெட்ரோல், டீசல் விலை உடன் சமையல் காஸ் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை நேற்று மேலும் ரூ.25 அதிகரித்தது. இதன்படி சென்னையில் ஒரு காஸ் சிலிண்டர் விலை 835 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.125யும், மூன்று மாதங்களில் ரூ.225யும் உயர்ந்தது. இது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
நாடு முழுவதும் இந்த விலை ஏற்றத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. எதிர்கட்சி தலைவர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை இந்த விலை ஏற்றத்தை கண்டித்து வருகின்றனர். குறிப்பாக டுவிட்டரில் இந்த விவகாரம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை டுவிட்டர் தளவாசிகள் இது #ModiTax என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
![]()
|
குறிப்பாக இதற்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இதுபோன்று பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்ந்தபோது, அப்போது மோடி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பா.ஜ.வினர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இன்று இவ்வளவு தூரம் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதுப்பற்றி ஆளும் பா.ஜ.வை சேர்ந்தவர்கள் வாய் திறக்கவில்லை என விமர்சிக்கின்றனர்.
மேலும் இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்
மோசமான கொள்கைகளால் மோடி அரசு ஏற்கனவே இந்தியர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இப்போது இதுபோன்ற விலை ஏற்றத்தால் நடுத்தர வர்க்க இந்தியர்களை வறுமையின் விளிம்பில் கொண்டு வருகிறது.
எல்பிஜி உயர்வு சிக்கல் தீர்க்கப்பட்டது. நரேந்திர மோடி இந்தியாவை மீண்டும் பழைய நாட்களுக்கு அழைத்துச் செல்கிறார் என ஒருவர் பதிவிட்டு காஸ் அடுப்பிற்கு கீழே விறகு வைத்து எரிக்கும் போட்டோவை கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் சமையல் காஸ் விலை ரூ.225 உயர்ந்துள்ளது. இதுவரை கண்டிராத மிகப்பெரிய விலையேற்றம் இது. இந்திய மக்கள் மோடி வரியின் கொள்ளையை அனுபவித்து வருகின்றனர்.
![]()
|
வளர்ச்சி என்ற பெயரில் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி பிரிட்டிஷ் அரசு கொள்ளையடித்தது போன்று இப்போது இதுபோன்று விலையை உயர்த்தி கொள்ளை அடிக்கிறார்கள். உண்மையில் வளர்ச்சியின் பெயரில், அவர்கள் தங்கள் வணிகத்தை வளர்ச்சி அடைய செய்கிறார்கள்.
எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் பெற, சாமானிய மக்களின் மீது இந்த விலை ஏற்றத்தை மத்திய அரசு திணிக்கிறது.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை #ModiTax என்ற ஹேஷ்டாக்கில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு நாடு முழுக்க இந்த விலையேற்றத்தை கண்டித்து எதிர்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களும் இந்த ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE