பார்லிமென்டின் இரண்டு சபை நிகழ்ச்சிகளையும், நேரலை செய்து வரும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா, 'டிவி' சேனல்கள் இணைக்கப்பட்டு, 'சன்சத் டிவி' என்ற பெயரில், ஒரே தொலைக்காட்சித் தளமாக, மாற்றப்பட்டுள்ளது.
லோக்சபாவும், ராஜ்யசபாவும் அலுவல்கள், விதிமுறைகள் போன்றவற்றில், ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. உச்சரிக்கும் வார்த்தைகளில் துவங்கி, நாற்காலி, தரைவிரிப்புகள் உள்ளிட்டவற்றின் நிறங்களில்கூட வித்தியாசம் தெரியும். சபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு, 2006ல், சோம்நாத் சட்டர்ஜி லோக்சபா சபாநாயகராக இருந்த போது, அவரது முயற்சியின் அடிப்படையில், 'லோக்சபா டிவி' துவங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, 2011ல் ராஜ்யசபா, 'டிவி'யும் துவங்கப்பட்டது.
லோக்சபா, 'டிவி'க்கு, பார்லிமென்ட் வளாகத்திற்குள்ளேயே, ஸ்டூடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளும், உள்ளன. ராஜ்யசபா, 'டிவி'க்கு, பார்லிமென்டிற்கு வெளியே, தல்கோட்ரா மைதானம் அருகேயுள்ள, அரசு கட்டடத்தில், 20 கோடி ரூபாய் வரை வாடகை தந்து, அதில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த, 2017ல், இந்த இரண்டு, 'டிவி'க்களையும் ஒன்றாக்கும் யோசனை உருவாகி, அதற்கான நடவடிக்கைகள் துவங்கின. அதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு, தன் அறிக்கையை, சமீபத்தில் அரசிடம் வழங்கியிருந்தது.அதன்படி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா, 'டிவி'க்கள் ஒன்றாக்கப்பட்டு, 'சன்சத் டிவி' என்ற புதிய பெயரில் செயல்படுமென, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'சன்சத்' என்றால், ஹிந்தியில், 'பார்லிமென்ட்' என, அர்த்தம். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக, ரவிகபூர் என்ற ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா, 'டிவி'யின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த மனோஜ்குமார் பாண்டே, அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டிற்கு அருகில் உள்ள மகாதேவ் சாலையில் தான், தற்போது லோக்சபா, 'டிவி' அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் தான், இனிமேல், சன்சத், 'டிவி' அலுவலகமாக செயல்பட உள்ளது. ஒரே அலுவலகம், ஒரே தலைமை, ஒரே நிர்வாகம் என, ஒரே குடைக்குள் சன்சத், 'டிவி' செயல்பட்டாலும், சபை நடக்காத நாட்களில், செய்திகள், நாட்டு நடப்புகள், பேட்டிகள், விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடரும்.
ஒரே, 'டிவி'யாக மாற்றப்பட்டுள்ளதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா, 'டிவி' சேனல்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஏராளமானோர் வேலையிழப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE