புதுடில்லி : தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய, புதிய கட்சிகளுக்கான காத்திருப்பு காலத்தை, 30 நாட்களில் இருந்து, ஏழு நாட்களாக குறைத்து, தேர்தல் கமிஷன், விதிகளை தளர்த்தியுள்ளது.

புதிதாக துவங்கப்படும் அரசியல் கட்சிகள், முறைப்படி தேர்தல் கமிஷனில், கட்சியை பதிவு செய்ய, துவங்கப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அதன் பின், இரு தேசிய நாளிதழ்கள் மற்றும் இரு உள்ளூர் நாளிதழ்களில், இரண்டு நாட்களுக்கு, புதிய கட்சியின் பெயரை விளம்பரம் செய்ய வேண்டும். ஆட்ேசபனை இருப்பவர்கள், விளம்பரம் வெளியான, 30 நாட்களுக்குள், தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்கலாம்.

கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த, 30 நாட்கள் கால அவகாசத்தை, ஏழு நாட்களாக குறைத்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாமில், மேற்கு வங்கம் ஆகிய, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE