புதுடில்லி : கடந்த ஆண்டில், இந்தியாவில், பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவினால் அதிக பாதிப்புக்குள்ளான ஆண்டான, 2020ல் மட்டும், இந்தியாவில், 40 பேர், 7,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து கொண்ட, 'பில்லியனர்ஸ்' பட்டியலில் புதிதாக இணைந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் பணக்காரராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் மட்டும், 24 சதவீதம் அதிகரித்துள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட, இரு மடங்காக அதிகரித்து உள்ளது. இதனையடுத்து, இவர், இந்தியாவின், இரண்டாவது பெரும் பணக்காரராக உள்ளார்.

கவுதம் அதானியின் சகோதரர் வினோத்தின் சொத்து மதிப்பு, 128 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 71, 540 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, சிலரது சொத்து மதிப்பு சரிவையும் கண்டிருக்கிறது. குறிப்பாக, 'பதஞ்சலி ஆயுர்வேத' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு, 32 சதவீதம் சரிந்து, 26 ஆயிரத்து, 280 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இந்தியாவில், 100 கோடி டாலர் அதாவது 7,300 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் 177 பேர் உள்ளனர். இதில், 60 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். டெல்லியில், 40 பேர்களும் பெங்களூருவில், 22 பேர்களும் உள்ளனர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில், 'டெஸ்லா' நிறுவனர் எலான் மஸ்க் முதல் இடத்திலும், 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE