சென்னை : தமிழ் வழி மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் சலுகை வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டதால், தமிழ் வழியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு, அரசு பணிகளில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான சட்டம், ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், சமீபத்தில், திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. வெறும் பட்டப் படிப்பு மட்டும், தமிழில் படித்தால் போதாது; ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கட்டாயம் தமிழில் படித்திருக்க வேண்டும் என, திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், ஆங்கில வழியில் இருந்து, பல மாணவர்கள், ஆறாம் வகுப்பில், தமிழ் வழிக்கு மாற துவங்கியுள்ளனர். புதிதாக, ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரும், தமிழ் வழியில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தாய்மொழியில் கற்க வைப்பதற்கு, இது சரியான திட்டம். ஆனால், ஆங்கில வழியில் படித்து விட்டு, இட ஒதுக்கீட்டுக்காக, பாதியில் தமிழ் வழிக்கு மாறும் போது, மாணவருக்கு, தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழில் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தமிழக தமிழாசிரியர் கழக முன்னாள் பொதுச்செயலர் இளங்கோ கூறியதாவது :அரசு வேலைவாய்ப்புக்கு, ஆறாம் வகுப்பில் இருந்து, தமிழில் படித்திருக்க வேண்டும் என்பதற்கு பதில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே, தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என, சட்டம் வந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.
முன்னுரிமை
மேலும், தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு, அரசு சலுகை அளிப்பது போல, சுத்த தமிழில் பெயர் வைக்கப்படும் மாணவர்களுக்கும், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE