
சில தினங்களுக்கு முன் கோவை வந்திருந்த பிரதமர் மோடி திரும்பும் போது விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலரை பார்த்தார்.
அவர்களில் ஒரு வயதான மூதாட்டியும் இருந்தார், அவரது முறை வரும்போது பிரதமர் அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றார்.
பிரதமருக்கே ஆசீர்வாதம் வழங்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற இந்த மூதாட்டி யார்?
அவர்தான் பாப்பம்மாள் என்று அழைக்கப்படும் 105 வயது மூதாட்டி ரங்கம்மாள்.
இப்போதும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பவர்,கடந்த எழுபது ஆண்டுகளாக தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருபவர், இதன் காரணமாகவே இவருக்கு இந்த ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை,மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.சிறு வயதில் பெற்றோரை இழந்து பாட்டியின் அரவனைப்பில் வளர்ந்தவர்,பாட்டியிடம் இருந்து வாழ்க்கையையும் விவசாயத்தையும் ஒரு சேர கற்றுக்கொண்டார்.விவரம் தெரிந்த நாள் முதலே விவசாயம்தான்.பள்ளிக்கூடம் பக்கம் போனதில்லை ஆனால் நாட்டு நிலவரம் அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக செய்தித்தாள்களை வாசிக்கும் அளவிற்கு எழுத்து கூட்டி படிக்க கற்றுக்கொண்டார்.
கணவர் பெயர் ராமசாமி,மனைவியின் விவசாய ஆர்வத்திற்கு அவரும் பெருந்துணையாக இருந்தார்.குழந்தைகள் இல்லாத குறையை போக்க இருவரும் விவசாயத்தில் தீவிர ஆர்வம் காட்டினர்.கணவர் இறந்த பிறகு அவர் நேசித்த விவசாயத்தை அவரை நேசிப்பது போலவே நேசித்தார்,அவர் விதைத்த மரங்களை மடியில் சுமந்த பிள்ளையாக கருதி வளர்த்தார்.இயற்கை விவசாயம் இவரது உதிரத்தில் ஒன்றாக கலந்து விட்டது. ஒரு கட்டத்தில் விவசாயத்தை முழுமையாக கற்றுக் கொள்ள கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார், பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராக பொறுப்பு வகித்தார்.
தனது நிலத்தில் விளைந்த காய்,கறி போன்ற பொருட்களை குறைந்த விலையிலேயே மக்களுக்கு வழங்கிவந்தார்.கிராம மக்கள் மீது இவரும் இவர் மீது கிராமத்தினரும் அன்பாக இருப்பர் , தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும்,பின்னர் கவுன்சிலராகவும்,மாதர் சங்க தலைவராகவும் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.
அந்தக்காலம் ஆரோக்கியமான காலம் கம்பு,தினை,ராகி,சோளம்,வரகு போன்றவைதான் பிரதான உணவு விசேஷ நாட்களில்தான் அரசி உணவு எடுத்துக் கொள்வதுண்டு.எந்த உணவாக இருந்தாலும் அளவோடு வாழை இலையில் வைத்துதான் சாப்பிடுவார்.எப்போதாவது காய்ச்சல் தலைவலி வரும் அதையும் கைவைத்தியம் பார்த்தே சரி செய்து கொள்வார் ,இதுவரை ஆஸ்பத்திரி பக்கம் போனதில்லை.உழைக்காமலும் குளிக்காமலும் ஒரு நாளும் உணவு எடுத்துக் கொண்டதில்லை.
மண்ணையும் இயற்கை விவசாயத்தையும் மதிக்கும் என்னை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுத்துள்ளனர்.இது எனக்கு கிடைத்துள்ள விருது அல்ல இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த விருது.இந்த நிலையில் கோவை வந்த பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமே அவ்வளவு பெரிய மனிதர் என் ககைளைப்பிடித்து தலையில் வைத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டது மகிழ்வான நிகழ்வு.
இத்துணை பெருமைக்குரிய பத்மஸ்ரீ பாப்பாம்மாள் பாட்டியை ரெயின் டிராப்ஸ் அமைப்பினர் சென்னையில் வருகின்ற ஆறாம் தேதி நடத்தும் விழாவில் கவுரவிக்க இருக்கின்றனர்.விழா பற்றிய விவரம் அறிய 92808 09000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE