புதுடில்லி:டில்லி மாநகராட்சியில், ஐந்து வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், நான்கில் ஆம் ஆத்மியும்; ஒன்றில் காங்கிரசும் வெற்றி பெற்றன.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி மாநகராட்சி, கிழக்கு, வடக்கு, தெற்கு என, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் கடந்த, 15 ஆண்டுகளாக, பா.ஜ., தான் ஆட்சியில் உள்ளது.இந்நிலையில், மாநகராட்சியில் காலியான ஐந்து வார்டுகளுக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், நான்கு வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களும், ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
மூன்று மாநகராட்சிகளுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது பற்றி, டில்லி மாநில பா.ஜ., தலைவர் ஆதேஷ் குப்தா கூறுகையில், ''இடைத்தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தோல்வி குறித்து, ஆய்வு செய்வோம். ''அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், மூன்று மாநகராட்சிகளையும், பா.ஜ., மீண்டும் கைப்பற்றும்,'' என்றார்.
இடைத்தேர்தல் வெற்றி பற்றி, முதல்வர் கெஜ்ரிவால், 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில், ''வளர்ச்சி பணிகளுக்காக, டில்லி மக்கள் மீண்டும் ஓட்டளித்து உள்ளனர். ''மாநகராட்சியில், 15 ஆண்டு கால பா.ஜ.,வின் முறைகேடான ஆட்சியால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு, மூன்று மாநகராட்சிகளையும், ஆம் ஆத்மி கைப்பற்றும்,'' என்றார்.