கோல்கட்டா:'கொரோனா தடுப்பூசி சான்றிதழில், பிரதமர் நரேந்திர மோடியின் படம், பெயர் இடம்பெற்றுள்ளது, அதிகார துஷ்பிரயோகம் ஆகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, தேர்தல் கமிஷனில், திரிணமுல் காங்., புகார் அளித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில், திரிணமுல் காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான, டெரக் ஓபிரையன், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் படம், பெயர் மற்றும் அவர் கூறுவது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.இது, பா.ஜ.,வின் அதிகார துஷ்பிரயோகம்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகள்; முன்களப் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், துாய்மைப் பணியாளர் உள்ளிட்டோருக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல், தடுப்பூசிக்கான பெருமைகள் மோடிக்கு சேரும் வகையில், அதிகார துஷ்பிரயோகம் நடந்து உள்ளது.மேலும், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். அதனால், சான்றிதழில் மோடியின் படம், பெயர் உள்ளிட்டவை இடம்பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.