மதுரை : தமிழக சாலைகளில் வன விலங்குகள் கடந்து செல்ல தகுந்த வழித்தடம் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை அதலை புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு: மணப்பாறை அருகே தச்சமலை முதல் பெரியமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இடையே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு இடத்திற்கு விலங்குகள் இடம்பெயர சாலையை கடக்கின்றன. வாகனங்கள் மோதி விபத்திற்கு உள்ளாகின்றன. ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற யானை மீது சமீபத்தில் வாகனம் மோதியது. யானை காயமடைந்தது.இந்தியாவில் வனப்பகுதியில் ரயில்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றை கடக்க முயன்றபோது ரயில்கள் மோதி 200 யானைகள் பலியானதாக இந்திய வன உயிரின அறக்கட்டளை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தச்சமலை முதல் பெரியமலை வனப்பகுதி இடையே வனவிலங்குகள் கடந்து செல்ல சுரங்கப்பாதை அல்லது மாற்று வழித்தடம் அமைக்க வேண்டும்.தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகள், ரயில் பாதைகளில் வாகனங்களால் வனவிலங்குகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் பகுதிகளை அடையாளம் காண வேண்டும். அங்கு வனவிலங்குகள் கடந்து செல்ல தகுந்த வழித்தடம் ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன்.
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு புஷ்பவனம் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு மத்திய, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு மார்ச் 24க்கு ஒத்திவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE