எப்படி இருக்க வேண்டும் பள்ளி நூலகம்: படிக்க வழிகாட்டுகிறார் ஆயிஷா இரா.நடராசன்| Dinamalar

எப்படி இருக்க வேண்டும் பள்ளி நூலகம்: படிக்க வழிகாட்டுகிறார் 'ஆயிஷா' இரா.நடராசன்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021
Share
குழந்தை இலக்கியத்துக்கான, 'பால சாகித்ய அகாடமி' விருது பெற்றவர் ரா.நடராசன். 'ஆயிஷா' எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால், 'ஆயிஷா' நடராசனாக அறியப்படுபவர்; பள்ளி தலைமை ஆசிரியராகவும் இருப்பவர். அவரிடம் உரையாடியதில் இருந்து...தற்போது குழந்தைகள், புத்தகம் படிக்கும் சூழல் உள்ளதா? குழந்தைகளுக்காகவே தமிழில் வெளியான, 'கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர்' போன்ற
 எப்படி இருக்க வேண்டும் பள்ளி நூலகம்:  படிக்க வழிகாட்டுகிறார் 'ஆயிஷா' இரா.நடராசன்

குழந்தை இலக்கியத்துக்கான, 'பால சாகித்ய அகாடமி' விருது பெற்றவர் ரா.நடராசன். 'ஆயிஷா' எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால், 'ஆயிஷா' நடராசனாக அறியப்படுபவர்; பள்ளி தலைமை ஆசிரியராகவும் இருப்பவர். அவரிடம் உரையாடியதில் இருந்து...


தற்போது குழந்தைகள், புத்தகம் படிக்கும் சூழல் உள்ளதா?


குழந்தைகளுக்காகவே தமிழில் வெளியான, 'கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர்' போன்ற புத்தகங்களை, குழந்தைகளுக்காக வாங்கி, பெற்றோரும் படித்தனர். அனைவரும், இன்ஜினியர், டாக்டர் ஆகலாம் என்னும் வகையில், 1980க்கு பின், மாற்றப்பட்ட கல்வி முறையால், பாடப்புத்தகங்களைச் சார்ந்து மட்டுமே மாணவர்கள் இயங்கத் துவங்கினர். புத்தகச் சுமை கூடி, மற்ற புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் குறைந்தது. அந்த காலகட்டத்தில், நான், கவிதை, சிறுகதை என எழுதிக் கொண்டிருந்தேன். மாணவர்களின் பழக்க வழக்கங்கள் மாறுவதைக் கண்டு, சிறுவர்களுக்கான இலக்கியத்தை தான் படைக்க வேண்டும் என, முடிவெடுத்தேன்.

அதை பலரும் கேலி செய்தனர். 'தினமலர்' நாளிதழும், குழந்தைகளின் சிந்தனையை வளர்க்கும் விதத்தில், வாரம் ஒரு முறை, சிறுவர்களுக்காகவே, 'சிறுவர் மலர்' இதழை வெளியிட்டது. இப்படித் தான், புத்தகம் படிக்கும் சூழலை உருவாக்க முடிந்தது.


சிறுவர்களை வாசிக்க வைக்க, என்ன செய்ய வேண்டும்?


குழந்தைகளின் முன், பெற்றோரும் புத்தகம் படிக்க வேண்டும். 'விஞ்ஞானியாவது எப்படி, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெறுவது எப்படி' என்பது போன்ற, தடிமனான புத்தகங்களை வாங்கி, குழந்தைகளுக்கு திணிக்கக் கூடாது. அப்படி கட்டாயமாக்கி தருவது, பயனளிக்காது. குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கித் தருவதை விட, அவர்களையே புத்தகங்களை வாங்கச் சொன்னால் தான், அவர்கள் வாசிப்பர். குழந்தைகளிடமே வாய்ப்பை அளிக்கும் போது, அவர்களின் ஆர்வத்துக்கு ஏற்பதான், புத்தகங்களை தேர்வு செய்வர். அதை, வீட்டிற்கு வந்து பலமுறை படிப்பர்.


சிறுவர் நுால்களை எப்படி பிரிக்கலாம்?


சிறுவர் நுால்களை, மூன்று வகையாக பிரிக்கலாம். அதாவது, குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதுவது. இரண்டாவது, மொழிபெயர்ப்பு நுால்கள். மூன்றாவது, குழந்தைகளே படைக்கும் நுால்கள். இவை அனைத்துமே, நல்ல அச்சில், அழகான படங்களுடன் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.


பள்ளிகளில் நுாலகங்கள் எப்படி உள்ளன?


பெரும்பாலான பள்ளிகளில், நுால்கள் வைக்கப் பட்டிருக்கும் பீரோக்களும், நுாலகமும் திறக்கப்படுவதே இல்லை. பெரும்பாலான நுாலகர்களுக்கு, ஆண்டு இறுதியில் தான், பழைய நுால்களின் இருப்பு, வாங்க வேண்டிய புதிய நுால் பற்றி கணக்கெடுப்பர். அவருக்குத் தெரிந்த பதிப்பகத்தில், அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டுத் தொகையில், புத்தகங்கள் வாங்கி கணக்கு முடித்து விடுவார். ஆனால், நுாலகங்கள் எப்போதும் திறந்திருக்க வேண்டும். மாணவர்களை, புத்தகக் காட்சிக்கு அழைத்துச் சென்று, அவர்களை விட்டே புத்தகங்களை தேடி எடுத்து, நுாலகங்களில் சேர்க்க வேண்டும். இப்படி இருந்தால் தான், நுால்களைப் படிக்க, மாணவர்கள் வருவர். புத்தகக் காட்சியில் தான் நுாலகங்களுக்கு நுால்கள் வாங்க வேண்டும் என, அரசு உத்தரவிட வேண்டும்.


இன்றைய பெற்றோருக்கு, ஆசிரியராக கூற விரும்புவது?


பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஐ.ஏ.எஸ்., டாக்டர், விஞ்ஞானி என, பலவாறாக ஆக்க வேண்டும் என்பதற்காக, கசக்கிப் பிழிகின்றனர். இதனால், பலன் பெரிதாக இருக்காது. அதற்குப் பதில், அவர்களின் அறையில், ஒரு புத்தக அலமாரி அமைத்து, குழந்தைகளுக்கான நுால்களை வாங்கித் தந்தால் போதும். அவர்கள் எதுவாக ஆக வேண்டுமோ, அதை, அந்த புத்தகங்கள் ஆக்கிவிடும். மிதி ரிக் ஷாவில், புத்தகம் படித்து, பள்ளி போனவர் தான், சுந்தர் பிச்சை. அதை, பெற்றோர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X