கோல்கட்டா: மேற்கு வங்கம் வெளியாட்கள் பிடியில் சென்றுவிடக் கூடாது என பா.ஜ.,வை குறிப்பிட்டு மம்தா பிரசாரம் செய்யும் நிலையில், அவருக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கும் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் யார் என்று பா.ஜ.க., கேள்வி எழுப்பியுள்ளது.

விரைவில் 5 மாநிலங்களில் தொடங்க இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் மேற்கு வங்க மாநிலம் தான் கொதிகலனாக இருக்கிறது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் பெரியளவில் வளர்ந்துள்ளது பா.ஜ.க., அவர்களின் வளர்ச்சியை தடுத்து தீவிரமாக எதிர்ப்பதாக நினைத்து மம்தாவே அக்கட்சியை வளர்த்துவிட்டார்.

மம்தா கட்சியிலிருந்த பல பெருந்தலைகள் தற்போது பா.ஜ.க.,வுக்கு அணி மாறிவிட்டன. இதனால் 3-வது முறையாக திரிணாமுல்லை ஆளும் கட்சி ஆக்குவதற்கு கடும் முயற்சிகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பா.ஜ.க.,வை சமாளிக்க அவர்களை வெளியாட்கள், மாநிலத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் எனும் பிரசாரத்தை மம்தா கையிலெடுத்துள்ளார். “குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வங்காளத்தை ஆளக்கூடாது. திரிணாமுல் காங்கிரஸ் தான் ஆட்சி செய்ய வேண்டும்.” என சமீபத்தில் மம்தா பேசினார். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மம்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவும் மம்தாவை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கினார்.

இதை வைத்து அம்மாநில பா.ஜ.க., மம்தாவுக்கு பதிலடி தந்துள்ளது. பா.ஜ.க., செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, “முதல்வரும், அவரது மருமகனும் பா.ஜ.க.,வை வெளியாள் என்கின்றனர். ஆனால் தற்போது பா.ஜ.க.,வை எதிர்க்க பிற கட்சிகளை அழைத்து வருகின்றனர். அவர்கள் வெளியாட்கள் இல்லையா? திரிணாமுல் காங்.,க்கு உண்மையில் பயம். இம்முறை தோற்க போகிறோம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.” என கூறினார். மாநில பா.ஜ.க.,வின் டுவிட்டர் பக்கத்தில், “ஆண்டி உங்களின் ஒரே பிரச்னை மோடி. இது அனைவருக்கும் தெரியும்.” என கிண்டலடித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE