அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு, தமிழக வேலைகளில் வாய்ப்பளித்தும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடும் தமிழக அரசை வீட்டுக்கு அனுப்பி, தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'நீங்கள் சொன்னால் யார் கேட்கப் போகின்றனர்; எந்த நம்பிக்கையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
ஈ.வெ.ரா., சிலை தொடர்ந்து தாக்கப்படுவதும், அது தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படாததும் இந்த ஆட்சியில் தொடர் கதையாக தொடர்கிறது; இதை கண்டிக்கிறேன்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
'ஊர் ஊருக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் சிலை வைத்து விட்டு, இப்போது குற்றம் சொல்வது சரியல்ல...' என, சொல்லத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.
எங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ராதிகாவுக்கு, அரசியலில் நீண்ட, நெடிய அனுபவம் உள்ளது. தகுதியின் அடிப்படையில் தான் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. படித்துக் கொண்டிருக்கும் என் மகனை, துணைப் பொதுச் செயலர் ஆக்கினால் தான் தப்பு.
- சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார்

'மக்களுக்கு தெரிந்து அவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இரவு, பகலாக சினிமாவிலும், டிராமாவிலும் நடித்து தான் வந்துள்ளார். அரசியலில் அவருக்கு எங்கிருந்து அனுபவம் வந்தது என சொன்னால், அங்கு போய் மேலும் சிலர் பெற்றுக் கொள்வரே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார் பேட்டி.
சமையல் காஸ் சிலிண்டர் விலை, தொடர்ந்து, நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதை திரும்ப பெற வேண்டும்.
- இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்
'உண்மையில் இது, கவலை அளிக்கக் கூடியது தான். ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கிறதே என்று கூட, மத்திய அரசு கவலைப்பட்டது போல தெரியவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.
கிறிஸ்தவர், முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு, தனி வாரியம் இருப்பது போல், ஹிந்துக்களின் கோவில் சொத்துக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.
- ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
'அறநிலையத் துறையை, தி.மு.க., தான் கொண்டு வந்தது. அதன் பிற திட்டங்களை நீர்த்து போகச் செய்த, அ.தி.மு.க., அரசு, இதை மட்டும் தொடர்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE