பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் டுவிட்டிரில் வெளியிட்ட பதிவு:தினமலர் நாளிதழ் வளர்ச்சிக்காகவும், புகழுக்காகவும் பெரும் பங்காற்றிய ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் திடீர்
தினமலர், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர்கள் இரங்கல்

சென்னை: தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்


மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் டுவிட்டிரில் வெளியிட்ட பதிவு:

தினமலர் நாளிதழ் வளர்ச்சிக்காகவும், புகழுக்காகவும் பெரும் பங்காற்றிய ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் திடீர் மரணம் எனக்கு பெரும் கவலையளித்துள்ளது, அவரது இழப்பால் வாடும் குடும்பத்துக்கு கடவுள் வலிமையை கொடுக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்..


— Prakash Javadekar (@PrakashJavdekar) March 4, 2021Saddened to hear the demise of Shri R Krishnamurthy ji. His contribution was instrumental in making Dinamalar, one of the most popular Tamil Dailies. Deep condolences, may God give strength to his family to bear the loss. Om Shanti 🙏

— Prakash Javadekar (@PrakashJavdekar) March 4, 2021
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை


latest tamil newsதினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் துயருற்றேன். மறைந்த டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகை மற்றும் இதழியல் துறைகளில் மட்டுமல்லாது, நாணயவியல் துறையிலும் தடம் பதித்து தமிழகத்தின் நாணயவியலின் தந்தை என்றும் போற்றப்படுபவர். அவரது மறைவு பத்திரிகை மற்றும் நாணயவியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் திரு.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.தென் தமிழகத்தில் பிறந்து தனது எழுத்து பணியாலும்,பத்திரிகை சேவையாலும் தலைநகரில் தொல்காப்பிய விருது பெற்ற அன்னாரின் இழப்பு பத்திரிகை உலகிற்கும்,தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு (1/2) pic.twitter.com/D7YCsSOW4j
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 4, 2021அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். (2/2)
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 4, 2021திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


latest tamil newsதொடர்ந்து டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்திஅவர்கள் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி:இதழியல் துறையில் தனக்கான பாதையில் முத்திரை பதித்த தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவு, தமிழ்ப் பத்திரிகையுலகுக்குப் பேரிழப்பாகும். அச்சு ஊடகத்தில் கணினிப் பயன்பாட்டை 1980-களின் இறுதியிலேயே கொண்டு வந்த முன்னோடி நாளிதழ்களில் முரசொலிக்கும் தினமலருக்கும் முக்கிய பங்கு உண்டு.பத்திரிகையாளராக மட்டுமின்றி, நாணயவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகளும், ஆதாரங்களும் இந்திய அரசின் செம்மொழித் தகுதி தமிழுக்குக் கிடைத்திட கருணாநிதி எடுத்த முயற்சிகளுக்குத் துணை நின்றன. இத்தகைய சிறப்புமிகு பணிகளுக்காகக் ஜனாதிபதியால் தொல்காப்பியர் விருது வழங்கப் பெற்ற பெருமைக்குரியவர் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகைத் துறையினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ம.தி.மு.க., பொது செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:


latest tamil news


தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள், 1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாளிதழ், 57 முதல் திருநெல்வேலி தச்சநல்லூருக்கு இடம் பெயர்ந்து வந்தது. அவரது மகன் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி, சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றபிறகு, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆக மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதை விட, நாளிதழ் மூலமாக அடித்தட்டு மக்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்குப் பெருந்தொண்டு ஆற்ற முடியும் என்ற வேண்டும் என்ற தந்தை இராமசுப்பு அவர்களின் அறிவுரையை ஏற்று, தினமலர் நாளிதழ் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதழியல் துறையில் பல புதுமைகளைப் புகுத்தினார். அயல்நாடுகளில் இருந்து புதிய அச்சுப்பொறிகளை இறக்குமதி செய்து பொருத்தினார்.

இந்திய நாளிதழ்களில், டெலிபிரிண்டர்களைப் பயன்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் ஆனார்.இன்று, கணிணிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, உலக அளவில் முதன்மையான பல மொழிகளுடன் போட்டி இடுகின்ற இடத்தில் இருக்கின்றது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி என்றால் அது மிகை அல்ல.


காப்புரிமை செய்யவில்லை


எழுத்து உருக்களைக் கையால் அச்சுக்கோர்த்து அச்சிடுகின்ற முறையில் இருந்து மாறி, கணிணிகளில் தட்டச்சு செய்து கோர்ப்பதற்குத் தேவையான, தமிழ் எழுத்துருக்களை (Fonts) ஆக்கிய முன்னோடி அவர்தான். அதற்காகப் பல நாடுகளுக்குப் பயணித்து, பல்வேறு தமிழ் எழுத்து உருக்களை ஆக்கினார். ஆனால், அந்த எழுத்துருக்களுக்குக் காப்புரிமை செய்து கொள்ளாமல், அனைவரும் பயன்படுத்திக்கொள்கின்ற வகையில், பொதுப்பயன்பாட்டுக்கு அளித்தார். அதன் காரணமாகவே, இன்று கணிணிகளில் தமிழ் சிறப்பு இடம் பெற்று இருக்கின்றது.அதேபோல, தினமலரில் வெளிவருகின்ற சிறப்புக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட வேண்டும் என சிலர் கூறியபோதும், அது புத்தகங்கள் அச்சிடுகின்ற பதிப்பகங்களைப் பாதிக்கும் எனக்கூறி, அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதழியல் அறத்துடன் இயங்கினார். தினமலர் நாளிதழுக்கு என தனிப்பட்ட கருத்து இயலை ஆக்கினார்.

பழந்தமிழர் வாழ்வியல் தடங்களை ஆய்வு செய்து, தமிழரின் தொன்மையை நிறுவுவதில், மிகப் பெரும் ஆர்வலராகத் திகழ்ந்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகவே, காவிரிப்பூம்பட்டினம் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. தமிழகத்தில் நாணய இயலின் தந்தை என்கின்ற அளவிற்கு, பழந்தமிழ் நாணயங்கள் சேகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவரது நாணய சேகரிப்புகளும், அந்தத் துறையில் அவர் எழுதி இருக்கின்ற ஆய்வு நூல்களும், தமிழரின் வரலாற்று ஆவணங்கள் ஆகும்.

நான் வேலூரில் பொடா சிறைவாசம் இருந்தபோது, என்னைச் சந்திப்பதற்காக, சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். அப்போது என்னிடம், “நான் இதுவரை சிறை வாயிலை மிதித்தது இல்லை. இந்த வழக்கை நீங்கள் எதிர்கொள்கின்ற விதமும், உங்கள் மன உறுதியும், நேர்மையும்தான் என்னை இங்கே வரச் செய்தது. உங்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக வந்தேன்” என்று சொன்னார்.
பலமுறை அவரைச் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். என் தந்தை போல, என் மீது பாசமும், பற்றும் பரிவும் கொண்டு இருந்தார். என் அழைப்பினை ஏற்று, என் இல்லத் திருமண நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று வாழ்த்திச் சிறப்பித்தார். அவருடைய மறைவு, தமிழகத்திற்கு பேரிழப்பு. இந்திய அரசின் உயர் விருதுகள் பெற்றவர் என்றாலும், அன்னாருக்கு தமிழக அரசு தனிச்சிறப்பு செய்ய வேண்டும். டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவால் துயருறும் தினமலர் குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.


அமைச்சர் வேலுமணி


தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் நாணயவியல், இதழியல் என பல துறைகளில் சேவையாற்றிய திரு.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். pic.twitter.com/X03rm5Hs6M

— SP Velumani (@SPVelumanicbe) March 4, 2021
அமமுக பொது செயலர் தினகரன்சென்னை தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் நாணயவியல் ஆராய்ச்சியாளருமான திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். (1/2)

— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 4, 2021பத்திரிகை துறையிலும், நாணயவியல் ஆராய்ச்சியிலும் குறிப்பிடத்தகுந்த பங்காற்றிய அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். (2/2)

— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 4, 2021பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், இந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவருமான டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி இன்று காலாமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தினமலர் நாளிதழின் ஆசிரியராகவும், நாணயவியல் சங்கத்தின் தலைவராகவும் பயனுள்ள பல பணிகளை செய்தவர். தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை தினமலர் நாளிதழில் முதலில் அறிமுகப்படுத்தியவர். கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி ஆவார். நாணயவியல் கழகத்தின் தலைவராகவும், ஆராய்ச்சியாளராகவும் இருந்து இவர் நிகழ்த்திய பல கண்டுபிடிப்புகள் தான் பின்னாலில் தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்படுவதற்கு உதவிய சான்றுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இதற்காக பின்னாளில், இவருக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தொல்காப்பியர் வழங்கப்பட்டது குறிப்பிட வேண்டியதாகும். எனது பொது வாழ்க்கையின் தொடக்க காலத்தில், நல்ல நண்பராக திகழ்ந்தவர். இறுதி வரை என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் , தினமலர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்து இரஙகலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.


தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி


தினமலர் நாளிதழின் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். சுமார், 40 ஆண்டுகளுக்கும்மேலாக தினமலர் நாளிதழின் ஆசிரியராக மிகச்சிறப்பாக பணியாற்றியவர். மறைந்த டி.வி.இராமசுப்பையர் அவர்களால் 1951ம் ஆண்டு தொடங்கப்பட்ட தினமலர், பத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் பதுப்பித்து வெளியிடப்பட்டு வருகிறது.இரா.கிருஷ்ணமூர்த்தி , பத்திரிகையாளராக மட்டுமல்லாமல், பழங்காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை தேடிக் கண்டுபிடித்து பெரும், ஆய்வுகளை மேற்கொண்டவர். நாளேட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முதன்முதலில் கடைபிடித்தவர். கணினியில் தமிழ் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. நாணயவியல் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.

2013ம் ஆண்டு ஜனாதிபதியால், இவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறைக்கு தமது சொந்த செலவில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டடம் கட்டி தந்தவர். இவர் பத்திரிகை துறையோடு, தமிழ்மொழி, கலாசாரம், பண்பாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இவரது இழப்பு, அனைத்து வகைகளிலும் ஈடு செய்ய முடியாது பேரிழப்பாகும். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தினமலர் குழுமத்தினருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.


முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்


தினமலர் முன்னாள் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர். இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்று (04.03.2021) காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் வடீவீஸ்வரம் கிராமத்தில் பிறந்த டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நிறுவனர் இராம. சுப்பையருக்கு அடுத்து தினமலர் இதழுத்து தலைமை தாங்கி திருச்சி, சென்னை, கோவை, மதுரை, வேலூர், நாகர்கோவில் பதிப்புகள் வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்.
தமிழுக்காக இவரது பணி மிகவும் போற்றத்தக்கது. பண்டைய தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள் சேகரிப்பு மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர் டாக்டர். இரா. கிருஷ்ணமூர்த்தி. செம்மொழியாக தமிழை அறிவிக்க தமிழக அரசு இவருடைய நாணய ஆய்வினை ஆதார தரவாக பயன்படுத்தியது. அதே போல கணினி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியதிலும் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி பங்கு மகத்தானது.


முதல்வர் பழனிசாமி இரங்கல்


முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி,தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, அவர்கள் தமிழ் அறிஞர், நாணவியல் ஆராய்ச்சியில், ஆர்வம் கொண்டு அது தொடர்பாக பல புத்தகங்கள் எழுதியவர். அன்னாரது மறைவு இந்திய பத்திரிகை உலகத்திற்கும், தமிழ் ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு


தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, அவர்களின் மறைவு பத்திரிகை துறையில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு, பத்திரிகை துறைக்கு மட்டுமல்லாது, வணிகத்துறை சார்ந்த எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.


அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புதினமலர் பதிப்பாசிரியர் டாக்டர் திரு இரா.கிருஷ்ணமூர்த்தி அவரது மறைவு பத்திரிக்கை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகும் மாபெரும் மனிதர். சென்னை செல்லும் போது அவரை சந்தித்தது. தில்லியில் அவருக்கு தொல்காப்பியர் விருது கிடைத்தபோது அவரை கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
இரா. முகுந்தன்
பொதுச் செயலாளர்
அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு


பாரதிதாசன் அறக்கட்டளை, புதுச்சேரி


இதழியில் வாயிலாக எங்களுக்கு ஆதரவு நல்கியவர்.உதவி கேட்ட பலருக்கும் உள்ளன்புடன் ஆதரவு காட்டிய நல்லுள்ளம் படைத்தவர். பல்வகைச் சிறப்புகளைத்தம்முடைய பண்புகளால் ,உழைப்பால் ஆழ்ந்த ஆற்றலால் அடைந்தவர் , காலத்தின் அழைப்பு நம்மிடருந்து அவரை பிரித்து விட்டது. நெடுந்துயரில் நிற்கின்றேன். அவர் பிரிவால் கண்கலந்குவோர்க்கு ஆழ்ந்த இரங்கல்! அன்னார்க்கு எங்கள் அஞ்சலியும் அன்பு வணக்கமும்! வாழ்க டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஐயா புகழ்
துயருடன்
கோ. பாரதி
பாரதிதாசன் அறக்கட்டளை, புதுச்சேரி

கவர்னர் இரங்கல்
டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
04-மார்-202119:26:32 IST Report Abuse
mathimandhiri டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி பத்திரிகை உலகின் ஒளி வீசும் விடி வெள்ளி. ஒரு இதழின் குறிக்கோள் எதுவோ அதைக் கோணாமல் செய்தது, புதுமைகளை புகுத்தியது, முனைப்புக் குறையாத சமூகப் பிரஞை , அதை ஒட்டிய பணி,தெளிந்த முதிர்ந்த நோக்கு, சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு உண்மையின் உரைகல்லாக இதழை இம்மி அளவும் பிசகாமல் நிலை நிறுத்தியதுஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இடமும் நேரமும் தான் அதற்குப் போதாது. அவரது உருவம் மட்டுமே அகன்ற நிலையில் அவர் விட்டு விட்டுச் சென்ற அந்த ஒளி என்றென்றும் தினமலரை வழி நடத்தும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. வாழ்க அவரது புகழ். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X