சென்னை:'காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, தடை விதிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
இம்மனுவை, பொதுச் செயலர் கே.டி.ராகவன், அரசு ஊழியர் பிரிவு தலைவர் பாலசந்திரன் ஆகியோர், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து அளித்தனர்.பின், கே.டி.ராகவன் அளித்த பேட்டி:காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல், மார்ச், 1ம் தேதி, கன்னியா குமரி மாவட்டம், உளகு முடு என்ற கிராமத்தில், ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடம் உரையாற்றி உள்ளார்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், பள்ளியிலோ, கல்லுாரியிலோ, மாணவர்கள் மத்தியில் பேச, அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. அப்படி பேசும்போது, மாணவர்களை துாண்டும் விதமாக, 'சுதந்திர யுத்தத்திற்கு தயாராக வேண்டும்' என, மாணவர்களை துாண்டியுள்ளார்.சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளை கடந்த பின், சுதந்திரத்திற்கு யுத்தம் செய்ய வேண்டும் என்ற, வகையில் பேசி உள்ளார்.
தேர்தல் நேரத்தில், மாணவர்கள் மத்தியில் பிரசாரம் போல், அவரது பேச்சு அமைந்துள்ளது. இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில், தேர்தல் பிரசாரம் செய்ய, ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என, தலைமை தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு அளித்துள்ளோம்.
தேர்தல் விதிமுறைகளை வேண்டுமென்றே, ராகுல் மீறி உள்ளார். மேலும், இந்திய தண்டனை சட்டங்களுக்கு எதிராக, மாணவர்களை துாண்டுகிற வகையில், ராகுல் பேச்சுஇருக்கிறது. பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், பிரசாரம் செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. எனவே, அவர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE