சென்னை:''அ.தி.மு.க., வேட்பாளரை வீழ்த்த, எவ்வளவோ சதி திட்டங்களை, எதிர்க்கட்சிகள் தீட்டி வருகின்றன. அனைவரும் இணைந்து, அவற்றை முறியடித்து, கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்,'' என, நேர்காணல் நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க., நேர்காணல் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல், அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உங்களை சந்திப்பதற்காகவே, இந்த நேர்காணல் நடத்தப்படுகிறது. ஒரு தொகுதிக்கு, 15 முதல், 20 பேர் வாய்ப்பு கேட்டுஉள்ளனர்.
வெற்றி
ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால், தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம், மற்றவர்களுக்கு இருக்கும். இருந்தாலும், கட்சி வெற்றி பெற வேண்டும்; மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து, கட்சி வேட்பாளரை, வெற்றி பெற வைக்க வேண்டும்.ஜெ., மறைந்த பின், முதல் சட்டசபை பொதுத் தேர்தலை சந்திக்க உள்ளோம். அ.தி.மு.க., வேட்பாளரை வீழ்த்த, எவ்வளவோ சதி திட்டங்களை, எதிர்க்கட்சிகள் தீட்டுகின்றன. அவற்றை முறியடித்து, கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இன்னும் பல அம்சங்கள், தேர்தல் அறிக்கையில் வரும். அரசு செய்த திட்டங்களை, மக்களிடம் எடுத்துரைத்து, ஓட்டு சேகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஜெ., வெற்றி பெற்று, சிறப்பான ஆட்சியை அளித்தார். அவரது மறைவுக்கு பின், நான்கு ஆண்டுகள், ஜெ., செய்த சாதனைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில், ஆட்சி செய்துள்ளோம். இதனால், நமக்கு சாதகமான நிலை ஏற்பட்டு உள்ளது. விருப்ப மனு கொடுத்துள்ள அனைவருக்கும், தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளது.
ஒத்துழைப்பு
ஆனால், ஒருவர் தான் போட்டியிட முடியும். எனவே, கட்சி தலைமை, யாரை அறிவிக்கிறதோ, அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இன்று, நாங்கள் தலைமை நிர்வாகிகளாக உள்ளோம். நாளை, நீங்கள் முதல்வராக, துணை முதல்வராக, தலைமை நிர்வாகிகளாக வர வாய்ப்புள்ளது. இக்கட்சியை தொண்டர்கள் கட்சியாக, ஜெ., உருவாக்கி உள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE