பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தலைவர்கள் இரங்கல்

Updated : மார் 06, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (1+ 1)
Share
Advertisement
சென்னை : டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, கவர்னர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்: 'தினமலர்' தமிழ் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், புகழ்பெற்ற தமிழ் கல்வெட்டு மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மறைவு செய்தி கேட்டு, கடும் அதிர்ச்சி
இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர்கள், இரங்கல்

சென்னை : டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, கவர்னர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கவர்னர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்:'தினமலர்' தமிழ் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், புகழ்பெற்ற தமிழ் கல்வெட்டு மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மறைவு செய்தி கேட்டு, கடும் அதிர்ச்சி அடைந்தேன்.அவர், முன்னணி தமிழ் பத்திரிகையான தினமலர் நாளிதழை நடத்தியதில், 40 ஆண்டுகள் நீண்ட அனுபவம் கொண்டவர். பண்டைய தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தத்தை கொண்டு வந்தார்.

தமிழின் தொன்மையை ஆராய துவங்கியது, அவருக்கு நாணயவியலில் ஆர்வத்தை துாண்டியது. அந்த ஆர்வம், அவரை உலகெங்கும் பயணிக்க வைத்தது. தென்னிந்தியாவை ஆண்ட மன்னர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களை சேகரித்தார்.
தமிழ் கல்வெட்டு எழுத்துகள், பழங்கால நாணயங்கள் தொடர்பாக, ஏராளமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவரது மறைவு தமிழக மக்களுக்கும், குறிப்பாக, தினமலர் வாசகர்களுக்கும் பேரிழப்பு.


இ.பி.எஸ்., முதல்வர்:'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும், அயராது பாடுபட்டவர்.
கடந்த, 2012 - 13ம் ஆண்டிற்கான, மத்திய அரசின் தொல்காப்பியர் விருது பெற்றவர். நாணவியல் துறையில், மிகுந்த ஆர்வம் கொண்டவர். பழங்கால நாணயங்களை ஆராய்ந்து, பழந்தமிழர் நாகரிக மேம்பாட்டை, உலகிற்கு எடுத்துரைத்தவர்.கணினி பயன்பாட்டுக்காக, ஐந்து தமிழ்மொழி எழுத்துருக்களை வடிவமைத்துள்ளார். அதில், 'ஸ்ரீலிபி' என்ற தமிழ்மொழி எழுத்துரு, மிகவும் பிரசித்தி பெற்றது. பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை பெற்றவர். கடின உழைப்பாளி. அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடிய பண்பாளர். அவர் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பு.


ஓ.பி.எஸ்., துணை முதல்வர்:'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியர், மூத்த வரலாற்று ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மறைவெய்திய செய்தி, மிகுந்த வேதனை அளிக்கிறது.இதழியல் துறையில், முத்திரை பதித்தவர். நாணயவியல் அறிஞர். தமிழ் வளர்ச்சிக்காக, அளப்பரிய பங்காற்றியவர். அவரது மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பு.


தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தென் தமிழகத்தில் பிறந்து தனது எழுத்து பணியாலும், பத்திரிகை சேவையாலும், தலைநகரில் தொல்காப்பிய விருது பெற்ற அன்னாரின் இழப்பு பத்திரிகை உலகிற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிகை நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு, தமிழ் பத்திரிகையுலகுக்குப் பேரிழப்பு. அச்சு ஊடகத்தில் கணினிப் பயன்பாட்டை, 1980களின் இறுதியில் கொண்டு வந்த முன்னோடி நாளிதழ்களில், முரசொலி மற்றும் தினமலர் நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு. நாணயவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவரது ஆய்வுகளும், ஆதாரங்களும் மத்திய அரசின் செம்மொழித் தகுதி தமிழுக்குக் கிடைக்க, கருணாநிதி எடுத்த முயற்சிகளுக்குத் துணை நின்றன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகைத் துறையினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


'விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். நமக்கும், அவருக்கும் கொள்கை, லட்சியம் ரீதியில் உள்ள வேறுபாடுகள் அநேகம் உண்டு.
என்றாலும், சக பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையிலும், மனிதநேய அடிப்படையிலும், அவரது இழப்பு நமக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாணவியல் துறையில் தனி ஆர்வலர் அவர். அவரது உழைப்பால், அப்பத்திரிகை வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றினார்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிக்கை குடும்பத்தினர் அனைவருக்கும், தி.க., சார்பில் நமது ஆழ்ந்த இரங்களையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.


தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமான செய்தி கேட்டு, அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 40 ஆண்டகளுக்கு மேல், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியராக மிகச் சிறப்பாக பணியாற்றிவர்.
கிருஷ்ணமூர்த்தி பத்திரிக்கையாளராக மட்டும் அல்லாமல், பழங்காலத்தில், பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை தேடிக் கண்டுபிடித்து, பெரும் ஆய்வுகளை மேற்கொண்டவர். நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை முதன் முதலில் கடைபிடித்தவர்.
கணினியில் தமிழ் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையும், அவருக்கு உண்டு. நாணவியல் தொடர்பாக, 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். 2013ல், குடியரசு தலைவரால், அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டது. அவரது இழப்பு, அனைத்து வகையிலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி மக்களுக்கு தொண்டாற்ற, இரா.கிருஷ்ணமூர்த்தி விரும்பினார். அதைவிட, நாளிதழ் வாயிலாக அடித்தட்டு மக்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்கு பெருந்தொண்டாற்ற முடியும் என்ற தந்தை ராமசுப்பையர் அறிவுரையை ஏற்று, 'தினமலர்' நாளிதழ் பணிகளில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். இதழியல் துறையில், பல புதுமைகளை புகுத்தினார். அவரது முயற்சியால், காவிரிபூம்பட்டினம் ஆராய்ச்சிகள் நடந்தன. தமிழகத்தில் நாணய இயலின் தந்தை என்கின்ற அளவிற்கு, பழந்தமிழ் நாணயங்கள் சேகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் அறிஞராகத் திகழ்ந்தார்.

அவரது நாணய சேகரிப்புகளும், அந்தத் துறையில் அவர் எழுதி இருக்கும் ஆய்வு நூல்களும், தமிழரின் வரலாற்று ஆவணங்கள். நான் வேலுாரில், 'பொடா' சிறைவாசம் இருந்த போது, என்னை சந்திப்பதற்காக, சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.
அப்போது, என்னிடம், 'நான் இதுவரை சிறை வாயிலை மிதித்தது இல்லை. இந்த வழக்கை நீங்கள் எதிர் கொள்ளும் விதமும், உங்கள் மன உறுதியும், நேர்மையும் தான், என்னை இங்கே வர செய்தது. உங்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக வந்தேன்' என்றார். அவருடைய மறைவு, தமிழகத்திற்கு பேரிழப்பு. இந்திய அரசின் உயர் விருதுகள் பெற்றவர் என்றாலும், அன்னாருக்கு, தமிழக அரசு, தனிச்சிறப்பு செய்ய வேண்டும்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை, 'தினமலர்' நாளிதழில் முதலில் அறிமுகப்படுத்தினார். கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கினார். நாணயவியல் ஆராய்ச்சியாளராக இவர் நிகழ்த்திய பல கண்டுபிடிப்புகள் தான், பின்னாளில் தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்படுவதற்கு உதவிய சான்றுகளில் குறிப்பிடத்தக்கவை.
எனது பொதுவாழ்வின் தொடக்கத்தில் நல்ல நண்பராக திகழ்ந்தவர். இறுதி வரை என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தினமலர் ஊழியர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .


அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன். பத்திரிகை துறையிலும், நாணயவியல் ஆராய்ச்சியிலும் குறிப்பிடத் தகுந்த பங்காற்றிய, அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.


தமிழக பா.ஜ., தலைவர் முருகன்:மிக மூத்த பத்திரிகையாளர். அவரது மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது; தமிழக பத்திரிகை துறைக்கு, மிகப்பெரிய இழப்பு. அவர் மிகப்பெரிய நாணயவியல் ஆராய்ச்சியாளர். பண்டைய தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களை, வெளிக் கொண்டு வந்து, ஜனாதிபதியிடம் தொல்காப்பியர் விருது பெற்றவர். பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கல்.


தமிழ் மாநில காங்., தலைவர் வாசன்:பத்திரிகை துறையில் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிபத்திரிகை தர்மத்தை கடைபிடித்தவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அன்னாரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிக்கைத் துறைக்கும் பேரிழப்பு.


முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:தமிழுக்காக இவரது பணி மிகவும் போற்றத்தக்கது. செம்மொழியாக தமிழை அறிவிக்க, தமிழக அரசு இவருடைய நாணய ஆய்வை ஆதார தரவாக பயன்படுத்தியது. அதேபோல கணினி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான, தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியதிலும், அவரது பணி மகத்தானது.


பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். 'தினமலர்' நாளிதழை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, தேசிய சிந்தனையை வளர்த்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன்.


பா.ஜ. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி:டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு செய்தி, வேதனை அளிக்கிறது. ஆர்.கே., எனப்படும் கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்து, கல்வெட்டு மற்றும் நாணவியல் பற்றிய பல ஆவணங்களையும், புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடை அடைய பிரார்த்திக்கிறேன்.


அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம்:என்னை போன்ற விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பட, 'தினமலர்' வழியே டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் எழுதிய நாணயவியல் தொடர்பான கட்டுரைகள், கம்போடியாவின் அங்கோவார்ட் கோவில் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றில், விரிவான தகவல்களை தெரிந்து கொண்டோம். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


ப.க.பொன்னுசாமி, பேராசிரியர்:நாணயவியல் ஆய்வறிஞர், கணினி தமிழ் முன்னோடி, நாளிதழ் நாயகர், உள்ளத்தாற் பொய்யா மாமனிதர் ஆர்.கே. அவரின் மறைவு, தமிழ்கூறும் நல்லுலகின் பேரிழப்பு.


கே.ஸ்ரீதரன், தொல்லியல் துறை ஓய்வு:நாணயவியல் ஆய்வுகளுக்கு பெரும் இழப்பு. 'தினமலர்' நாளிதழில் கட்டுரைகள் எழுத அவர், என்னை ஊக்குவித்தார். அவரின் மறைவு, பெரும் இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.


டாக்டர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி.,:என் தகப்பனார் 'தினமணி கதிர்' முன்னாள் ஆசிரியர் மறைந்த கே.ஆர்.வாசுதேவனுக்கு நெருங்கிய நல்ல நண்பர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரது மறைவு, பத்திரிக்கை துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.


'தமிழ் உள்ளளவும் நினைவுகூரப்படுவார்'
கல்வெட்டியலை போலவே தொல்லியலின் பிற துறைகளான நாணயவியல், அகழாய்வு முதலானவற்றிலும், தமிழகத்தில் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்க கால காசுகள் கிடைக்கவில்லை. மீன், புலி ஆகியவை பொறித்த சில சதுரமான காசுகள் கிடைத்தன. ஆனால், அவை சங்க காலத்தை சேர்ந்தவை என, உறுதியாக கூற முடியவில்லை.


இந்நிலையில், 1987ல், கிருஷ்ணமூர்த்தி, முதன் முதலாக கண்டுபிடித்து வாசித்தளித்த, பாண்டியன் பெருவழிக்காசு தமிழக நாணவியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. அவர் கண்டுபிடித்து வெளியிட்ட மாக்கோதை, குட்டுவன்கோதை என்ற சேர மன்னர்களின் பெயர்கள் பொறித்த வெள்ளி காசுகள் வரலாற்று அறிஞர்கள் இடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. சங்க கால காசுகள் அனைத்தையும் தொகுத்து, ஆங்கிலத்தில் ஒரு பெரும் நுாலாக வெளியிட்டு, உலக அரங்கில் தமிழ் பண்பாட்டின் பெருமையை உணர்த்தியதில், கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது.


உலகளவில் புகழ்பெற்ற நாணவியல் அறிஞர் பேராசிரியர் பொப்பே ஆராச்சியிடம், 'தமிழகத்தில் நடந்து வரும் நாணவியல் ஆராய்ச்சிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள், குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டு வரும் ஆய்வுகள் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன' என்று கேட்டேன்.
அதற்கு, 'நான் கிருஷ்ணமூர்த்தியை நன்கு அறிவேன். அவரது ஆய்வுகள் முக்கியமானவை. அவர் இந்த துறையில் சிறந்த ஞானம் உள்ளவர். தமிழகத்தை பொறுத்தமட்டில், அவர் தான் இந்த துறையின் முன்னோடி என்று சொல்லலாம். அவர் எழுதியிருக்கும் நுால்களும் முக்கியமானவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரை தவிர வேறு யாரும் நாணவியல் துறையில் ஆர்வம் காட்டவில்லை' என்றார்.
தமிழ் இதழியலுக்கும், எழுத்துருக்களை உருவாக்கவும், அவர், பல்வேறு பங்களிப்புகளை செய்துள்ளார். தமிழ் உள்ளளவும், அந்த பெருந்தகை நினைவுகூரப்படுவார்.
ரவிக்குமார், எம்.பி.,latest tamil newsபஞ்சவடி கோவில் இன்று மூடல்புதுச்சேரி: 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவை முன்னிட்டு, பஞ்சவடி கோவில் இன்று சாத்தப்படுகிறது.பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்ட ராமன், அறங்காவலர்கள் யுவராஜன், நரசிம்மன், பழனியப்பன், செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி ஷேத்திரத்தை முழுமையாக நிர்வகித்து வரும் பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் அறங்காவலரும், 'தினமலர்' நாளிதழின் புதுச்சேரி வெளியீட்டாளருமான, கே.வெங்கட்ராமனின் தந்தை, 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு, பஞ்சமுக ஜெய மாருதி சேவா டிரஸ்ட் ஆழ்ந்த இரங்கலும், வருத்தமும் தெரிவிகிறது.அவரின் ஆத்மா சாந்தியடைய பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் வாயிலாக, வலம்புரி ஸ்ரீ மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஸ்ரீஆஞ்சநேயரை பிரார்த்திக்கிறோம்.
இதை முன்னிட்டு, பஞ்சவடி கோவில், இன்று சாத்தப்படும்; தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
05-மார்-202122:16:03 IST Report Abuse
Subramanian ஆழ்ந்த இரங்கல்கள். அன்னார் ஆத்மா எல்லாம் வல்ல ஈசன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X