வடமதுரை: நேர்த்திக்கடன் செலுத்தும் கோயில் திருவிழாக்கள் அடுத்தடுத்து நடப்பதால் அய்யலுார் வாரச்சந்தையில் கருப்பு நிற ஆட்டு கிடாக்கள் மட்டும் அதிக விலைக்கு விற்கப்பட்டன
.தக்காளி பழ கமிஷன் மண்டிகளால் புகழ் பெற்ற அய்யலுாரில் வாரச்சந்தை வியாழன்தோறும் கூடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாரச்சந்தை வளாகத்திற்குள் காலை நேரத்தில் நடக்கும் ஆடுகள் விற்பனை தனி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்க, வாங்க அதிகளவில் வியாபாரிகள் வருகின்றனர்.தற்போது கிராமங்களில் நேர்த்திக்கடனாக ஆட்டு கிடா வெட்டி வழிபாடு நடக்கும் கோயில் திருவிழாக்கள் அடுத்தடுத்து நடக்க துவங்கியுள்ளன. நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோர் முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கும் கிடாக்களை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் அய்யலுார் சந்தையில் நேற்று இவ்வகை கிடாக்கள் மட்டும் (உயிருடன்) கிலோ ரூ.900 - 1000 எனவும், மற்றவை கிலோ ரூ.600 என்ற அளவிலும் விற்றன. நாட்டுக்கோழி கிலோ ரூ.350 முதல் 400 என விற்றது.