கடலுார் :கடலுாரில், சாலை மட்டத்தைவிட, தாழ்வாக உள்ள வீட்டை, 5 அடி உயரத்திற்கு, 'ஜாக்கி' உதவியுடன் துாக்கி நிறுத்தும் பணி நடக்கிறது.
கடலுார், மேற்கு வேணுகோபாலபுரத்தில் வசிப்பவர் குருநாதன், 65; அரிசி வியாபாரி. இவரது கான்கிரீட் வீடு, தரைத்தளம், 1,700 சதுர அடி, முதல் தளம், 900 சதுர அடி என, மொத்தம், 2,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடு, அவ்வப்போது சாலைகள் போடப்பட்டதில், 2 அடி பள்ளத்திற்கு போனது. இதனால், மழைக்காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
வீட்டை இடிக்காமல் மேலே உயர்த்த முடிவு செய்த குருநாதன், சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகினார். தனியார் நிறுவன ஊழியர்கள், 25க்கும் மேற்பட்டோர், 120 ஜாக்கிகளின் உதவியுடன், வீட்டை, 5 அடி உயர்த்தி, இரும்பு தண்டவாளத்தின் மீது நிறுத்தியுள்ளனர். இதை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
குருநாதன் கூறுகையில், ''12 லட்சம் ரூபாய் செலவில், வீட்டை உயர்த்தும் பணி நடக்கிறது. தொழிலாளர்கள் இங்கு தங்கி, ஒரு மாதமாக பணியில் ஈடுபடுகின்றனர். இரண்டு மாதங்களில், பணிகள் முடிந்து விடும்,'' என்றார்.