நிலக்கோட்டை: 'நிலக்கோட்டை தொகுதியில் திருவிழாக்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி அவசியம்' என, போலீசார் தெரிவித்தனர்.தமிழகத்தில் மாசி மாத சிவராத்திரிக்கு பங்காளிகள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்று கூடி சாமி கும்பிடுவர். இத்திருவிழா 2 அல்லது 3 நாட்கள் தொடரும் என்பதால் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி பெற்று நடத்துவர்.மார்ச் 15 அன்று சிவராத்திரி என்பதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அதிகமானோர் அனுமதி கேட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முதலில் அனுமதி பெற்ற பின்னரே, போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி பெற வேண்டும் என்பது கிராமத்தினருக்கு தெரியவில்லை.இது குறித்து போலீசார் கூறுகையில், ''பங்காளிகள் ஒன்று கூடி சாமி கும்பிடுவதில் பிரச்னைகள் வருவதில்லை. ஊர் திருவிழாக்களில் பிரச்னைகள் அதிகம் ஏற்படும். இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற்ற பின்னரே போலீஸ் ஸ்டேஷன் அனுமதிக்கு வர வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்'' என்றனர்.சிவராத்திரியை தொடர்ந்து பங்குனி திருவிழாக்கள் கொண்டாட சாமி சாட்டுதல் வைபவங்கள் பல கிராமங்களில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.