ஈரோடு:தேர்தல் நடத்தை விதியால், அரசுப்பள்ளி மாணவ - மாணவியருக்கு வழங்க, புத்தகப்பை ஏற்றி வந்த லாரி, அலைக்கழிக்கப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு வழங்க வேண்டிய புத்தக பைகள், ஹரியானா மாநிலத்தில் இருந்து, லாரியில், ஈரோடு மாவட்டம், பங்களாபுதுார் அரசு மேல்நிலை பள்ளிக்கு நேற்று முன்தினம் வந்தது. சந்தேகமடைந்த தி.மு.க.,வினர், தேர்தல் அலுவலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் லாரியை சோதனை செய்தனர். ஜெ., மற்றும் முதல்வர் இ.பி.எஸ்., படம், தமிழக பள்ளிக்கல்வி துறை என அச்சிடப்பட்டிருந்தது.இதையடுத்து, பள்ளி வகுப்பறையில் வைக்க அனுமதித்தனர்.
சிறிது நேரத்தில் பிரச்னையானதால், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு, லாரி சென்றது.அங்கு, இறக்கி வைக்க இடவசதி இல்லாததால், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு, நள்ளிரவில் லாரி சென்றது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலாகும் முன்னே, 13 ஆயிரத்து, 607 புத்தக பைகளுடன் லாரி கிளம்பியது, ஆவணங்களில் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், பிரச்னை எழுந்ததால், கலெக்டர் உத்தரவுக்குப் பின், ஈரோடு, கொங்கம்பாளையம், எஸ்.வி.என்., மெட்ரிக் மேல்நிலை பள்ளி வகுப்பறையில் நேற்று வைக்கப்பட்டன.
தி.மு.க.,வினர் எதிர்ப்பு
தஞ்சாவூர், பழைய கலெக்டர் அலுவலகம் முன், ராஜஸ்தான் பதிவெண் கொண்ட, கண்டெய்னர் லாரி வெகு நேரமாக நிற்பதாக கிடைத்த தகவலின்படி, தேர்தல் பறக்கும் படை அலுவலர் லுார்து பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள், லாரியை சோதனை செய்தனர். இதில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் மறைந்த ஜெயலிலதா படம் அச்சடிக்கப்பட்ட புத்தகப் பைகள் இருந்தன. தகவலறிந்த தி.மு.க.,வினர், அங்கு குவிந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், லாரியை, ராஜப்பா நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, 30 பண்டல்களில் இருந்த, 31 ஆயிரத்து, 83 புத்தகப் பைகளை பறிமுதல் செய்து, தி.மு.க.,வினர் முன்னிலையில், பள்ளி அறையில் பூட்டி சீல் வைத்தனர்.'இந்த பைகள், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு வழங்க, உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன' என போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE