திருப்பூர்: தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்ற ஒற்றை வாக்கியம் இடம் பெற்றது.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் தொடக்க வகுப்பிலேயே அவர்களுக்கு கணினி பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் ஒரு மாணவன் பிளஸ் 1 வகுப்பில்தான் கணினி அறிவியல் படிக்க முடிக்கிறது.இதனால் அவர்கள் உயர்கல்வியில் பல இடர்பாடுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'ஒன்றாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்பிரிவை அரசு பள்ளிகளில், ஆறாவது பாடமாக தொடங்க வேண்டும், கட்டாயப் பாடமாக கணினி பாடத்தை பயிற்று வைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்தனர்.இதன் விளைவுதான், தமிழக அரசின் ஒற்றை வாக்கிய அறிவிப்பாக மலர்ந்தது.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன் கூறியதாவது: கணினி ஆசிரியர்களுக்கு 'டெட்', 'ஏ.இ.இ.ஓ.,', 'டி.இ.ஓ.,' போன்ற தேர்வுகள் கிடையாது. கடந்த, 2011ல் அ.தி.மு.க., அரசு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்தியது. கணினி அறிவியலில் பி.எட்., முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த, 10 ஆண்டுகளாக தனியார் பள்ளியில் கூட வேலை கிடைக்காத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, 814 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில், திடீரென வந்த அரசாணையால், 60 ஆயிரம் பேரில் 25 ஆயிரம் பேர் மட்டும் தேர்வு எழுத முடிந்தது. மீதமுள்ள 35 ஆயிரம் பேர் தேர்வை கூட சந்திக்க முடியவில்லை. ஆசிரியரின்றி கணினிக்கல்வி சாத்தியமா?தற்போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பிற்கு, 'டேப்' மட்டும் வழங்கிவிட்டு, பள்ளியில் உள்ள பிற பாட ஆசிரியர்களை வைத்தே அவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதற்கான பயிற்சி துவங்கிவிட்டது. கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க அதற்கு உரிய துறையில் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE