மோடி அரசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவோம். வீடுகள் தோறும், வீதிகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றுவோம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நாடு தழுவிய நமது போராட்டத்தைத் தொடர்வோம்.
- விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் சண்முகம்
'இத்தனை காலமும், எத்தனையோ விவகாரங்களில் கறுப்புக்கொடியை ஏற்றி, என்ன மாற்றம் ஏற்படுத்தினீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் சண்முகம் அறிக்கை.
ஒரு தலைவர் தான் என்ன செய்யப் போகிறார் என்பதை, மக்களுக்கு சொல்ல வேண்டும். அதை விட்டு, தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பதோ, மாணவர்களுடன் சேர்ந்து தண்டால் எடுப்பதோ நல்லதல்ல.
- பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு
'நீங்கள் சொல்லும் தலைவரின், அவர் சகோதரியின் செயலைப் பார்க்கும் போது, இப்போது தான் அவர்கள், வெளி உலகத்தைப் பார்க்கின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு பேட்டி.
சிறுபான்மையினர் ஓட்டுக்களைப் பெற, ஹஜ் யாத்திரைக்கு மானியம் போன்ற திட்டங்களை, திராவிடக் கட்சிகள் அறிவிக்கின்றன. ஆனால், ஹிந்துக்களுக்காக எந்த திட்டங்களையும் அறிவிப்பதில்லை; ஹிந்துக்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். இந்த நிலையை மாற்ற, எங்களின் ஹிந்து மக்கள் கட்சி பாடுபடும்.
- ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்

'ஹிந்துக்களுக்காகத் தான், அறநிலையத் துறை என்ற ஒன்றை வைத்து, கோவில்களை காலி செய்து வருகின்றனரே...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.
திருச்சி, கோவை, நெல்லை, ஓசூர் போன்ற இடங்களில், பா.ஜ., சார்பில் ஒற்றுமையை காட்டுவதற்காக, விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டுள்ளது.
- பா.ஜ., தமிழக இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி
'உங்கள் கட்சி ஒற்றுமை, உலகம் அறிந்தது தானே; ஓட்டுகளை சேகரிக்க, வீடு வீடாகச் சென்றால் தான் பலன் கிடைக்கும்; யாத்திரை பலன் தராது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தமிழக இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி பேட்டி.
திருப்பத்துார் மாவட்டத்தில், எம்.ஜி.ஆர்., சிலை எரிப்பு, கடும் கண்டனத்திற்குரியது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட தி.மு.க.,வினர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ்.,
'ஒரு பெரியவர் சிலை மீது வர்ணம் பூசினாலே, குய்யோ முறையோ என குதிக்கும் சில கட்சிகள், அமைப்புகள், உங்களைப் போல எம்.ஜி.ஆர்., மீது துளி அளவு கூட கவலை காட்டவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ்., அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE