தவளை தான் இருக்குமிடத்தை சத்தம் எழுப்பி பிடிக்க வரும் பாம்புக்கு காட்டி கொடுத்து தானும் பலியாகி விடும். இது தற்போதைய நிலையில், தே.மு.தி.க.,விற்கு பொருத்தமாக உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டே பேச்சு வார்த்தை முடியாத நிலையில், கேப்டனின் மனைவி பிரேமலதா, மகன் பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் வாய்க்கு வந்தபடி பேசி வருவது இரு தரப்பிலும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.தே.மு.தி.க., துவக்கப்பட்ட காலத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளிலிருந்து, 'மாஜி' அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் வரிசையாக இணைந்தனர். ஆனால், அவர்களை தக்க வைக்க தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
யாரும் எதிர்பார்க்காத நிலையில், 2011 தேர்தலில் ஜெயலலிதா அக்கட்சியை கூட்டணியில் சேர்த்து, 29 இடங்களில் வெற்றி பெற உதவினார்.ஐம்பது ஆண்டு காலமாக தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருந்த, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பி எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்துக்கு பெற்றுக் கொடுத்தார். ஆனால், அந்த கூட்டணியில் கேப்டனால் தொடர முடியவில்லை.
பின்னர், 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், மூன்றாவது அணியாக போட்டியிட்டு கிடைத்த மரணஅடியால் மீண்டும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொண்டது, தே.மு.தி.க., தான். ஆனால், அதை மறந்து, கூட்டணியில் கூடுதல், 'சீட்' கொடுக்கவில்லை என்றால், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்' என, பிரேமலதா பேசுவதும், 'கூட்டணிக்காக, அ.தி.மு.க., தான் கெஞ்சுகிறது' என, சுதீஷ் பேசுவதும், அ.தி.மு.க.,வில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பா வழியில் அரசியலில், ஒரு இடத்தை பிடிப்பதற்கு முன்பே பிரபாகரன், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வை விமர்சிப்பது அவரது கட்சியினருக்கே பிடிக்கவில்லை. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை அ.தி.மு.க.,வை விமர்சித்து விட்டு பின் அந்த கட்சியுடன்கூட்டணி வைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க.,வை தொண்டர்கள் வெற்றி பெற செய்யவில்லை.
தற்போதைய நிலையில் அரசியலில் நிலைத்து நிற்க கூட்டணி அவசியம் என்பதை, தே.மு.தி.க., தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். 15 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து அந்த கட்சியினர் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். தனித்து போட்டி என்றால் அவர்கள் தலைதெறிக்க ஓடும் நிலை தான் உள்ளது.கடந்த, 2006 தேர்தலில் 11 சதவீத ஓட்டுக்களை பெற்ற தே.மு.தி.க.,விற்கு தற்போது எத்தனை சதவீத ஓட்டுக்கள் இருக்கும் என்பது அக்கட்சி தலைமைக்கு தெரியும்.
அதற்கு ஏற்ப தொகுதிகளை முயற்சிக்க வேண்டும் ஒழிய, பா.ம.க.,வை மனதில் வைத்து அந்த கட்சிக்கு கிடைத்த தொகுதிகளை, தே.மு.தி.க.,வும் எதிர்பார்ப்பது அதன் எதிர்கால நலனுக்கு நல்லது அல்ல. அதை விடுத்து கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து கூட்டணி கட்சியினரை விமர்சிப்பது, கூட்டணியில் இடம் பெற்ற பின்னால் தேர்தலில் அவர்களது ஒத்துழைப்பு கிடைக்காமல் போக செய்யும். இதை தே.மு.தி.க., தலைமை உணருமா என அந்த கட்சி தொண்டர்களே அரற்றுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE