புதுடில்லி : வேளாண் சட்டத்தை எதிர்த்து டில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. கடும் குளிர், வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லியில் டிராக்டர் பேரணி, சக்கா ஜாம் என பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர் விவசாயிகள். இவற்றியில் ஜன., 26ல் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறை சம்பவமாக மாறி, அதிர்ச்சியை தந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாக சமூகவலைதளங்களிலும் தினம் ஒரு ஹேஷ்டாக்கில் வைரலாக்கி டிரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாளை எட்டி உள்ளது. இன்றைய தினம் டில்லியில் அதிவேக விரைவுச் சாலையை 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சில விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை விலக்கி கொள்ள போவதில்லை என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ள விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #FarmersProtest100Days என்ற ஹேஷ்டாக்கில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அவர்கள் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள் இதோ....
100 நாட்கள். விவசாயிகள் தங்கள் உரிமைகளை எவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சுதந்திர போராட்டத்தை கண்டதில்லை. ஆனால் இந்தியாவின் சக்தியை என்னால் இந்த விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் உணர முடிந்தது.
இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். விவசாயிகள் போராட்டம் 100வது நாளை எட்டி உள்ளது. எவ்வளவு அச்சுறுத்தல்களும் இருந்தபோதிலும், நாங்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவளிப்போம்.
குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்குகிறது. ஒரு நேர்மறையான முடிவு மற்றும் சிக்கல்களின் இணக்கமான தீர்வை எதிர்பார்க்கலாம்.
விவசாயிகளின் 100 நாட்கள் வலிமை மற்றும் தியாகமே இவர்களின் போராட்டம். அதேசமயம் இது மோடி அரசின் 100 நாட்கள் கோழைத்தனம் மற்றும் அக்கறையின்மை.
எங்கள் பெண் சக்திகளின் 100 நாட்கள் போராட்டம். விவசாயிகளின் கிளர்ச்சி முடிந்துவிட்டது என்று நினைக்கும் அனைவருக்கும், இது ஒரு ஆரம்பம் தான். (விவசாயிகள் போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றுள்ளதை குறிக்கும் வகையில் இப்படி ஒரு பதிவு)
3 மாதங்களுக்கு மேலாக சாலையில் கிடக்கிறார்கள் விவசாயிகள். அவர்களின் பிரச்னைகளை என்னவென்று கேட்டு தீர்க்கவும். அனைவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள்.