பெய்ஜிங்: நடப்பு நிதியாண்டுக்கான சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் முதல் முறையாக 20 ஆயிரம் கோடி டாலரை தாண்டியிருப்பதாக அந்நாட்டு பத்திரிகை சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சீனா, அண்டை நாடான இந்தியா முதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா வரை பகையை சம்பாதித்து கொண்டது. இந்தியா - சீனா இடையே 9 மாதங்களாக நீடித்த லடாக் எல்லை பிரச்னை தற்போது தான் தணிந்துள்ளது. அமெரிக்காவுடன் சீனாவுக்கு பொருளாதார உரசல்கள், பசிபிக் பிராந்தியத்தில் சச்சரவுகள் உள்ளன. தைவான், ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்களால் ஆஸ்திரேலியாவும் சீனாவுக்கு எதிராக எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இதற்கிடையே சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸி., ஜப்பான் குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் தான் நடப்பு நிதியாண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை சீனா முதன்முறையாக 20,900 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக சீனா பாதுகாப்புக்கு செலவிடும் தொகையை அதிகரித்து வருகிறது. அதன்படி 2021-ல் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கான தொகை 6.8% அதிகரித்திருப்பதாக வரைவு பட்ஜெட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.
அமெரிக்கா நடப்பு நிதியாண்டில் பாதுகாப்புக்கென 74,000 கோடி டாலர் ஒதுக்கியுள்ளது. கடந்த மாதம் இந்தியா, பாதுகாப்புக்கென 4,740 கோடி டாலர் ஒதுக்கியது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 1% அதிகம். இந்திய ரூபாய் மதிப்பில் 3.47 லட்சம் கோடி ஆகும்.
ஜி.டி.பி., இலக்கு 6% ஆக நிர்ணயம்!
சீன பார்லி., கூட்டத்தொடரின் துவக்க நிகழ்வில் பேசிய அந்நாட்டு பிரதமர் லி, நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6%-க்கு மேல் நிர்ணயித்திருப்பதாக கூறினார். உலகின் 2-வது பெரிய பொருளாதாரமான சீனா, கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு கடும் நெருக்கடியை சந்தித்தது. இதனால் அப்போது ஜி.டி.பி., வளர்ச்சியை கணிக்காமல் விட்டது. இருப்பினும் 2.3% வளர்ச்சி பெற்றது. அந்த சமயத்தில் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பெரிய பொருளாதாரமாக சீனா இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE