தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள்: விடை இல்லாத சில கேள்விகள்

Updated : மார் 07, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேர்தல் தான் ஆட்சியை முடிவு செய்கிற ஜனநாயக ஏற்பாடு. ஆகவே, தேர்தல் நெருங்கி வராத காலத்திலேயே, எதிர்க்கட்சிகள் களமிறங்கி விடுகின்றன. ஆட்சியாளர்கள் எடுக்கிற நடவடிக்கைகளுக்கும், எடுக்கத் தவறிய நடவடிக்கைகளுக்கும், எதிர்ப்புச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. அந்தச் செயல்பாடுகளில், 'இனியேனும் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று, மக்களுக்கு விடுக்கப்படுகிற
 தேர்தல் களம், எதிர்க்கட்சிகள், கேள்விகள், ஆளுங்கட்சி, அதிமுக, பழனிசாமி அரசு

தேர்தல் தான் ஆட்சியை முடிவு செய்கிற ஜனநாயக ஏற்பாடு. ஆகவே, தேர்தல் நெருங்கி வராத காலத்திலேயே, எதிர்க்கட்சிகள் களமிறங்கி விடுகின்றன.

ஆட்சியாளர்கள் எடுக்கிற நடவடிக்கைகளுக்கும், எடுக்கத் தவறிய நடவடிக்கைகளுக்கும், எதிர்ப்புச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. அந்தச் செயல்பாடுகளில், 'இனியேனும் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று, மக்களுக்கு விடுக்கப்படுகிற வேண்டுகோள் உள்ளார்ந்ததாக இருக்கும். அதன் தொகுப்பு தான், தேர்தல் நெருங்கியதும் புதிய வாக்குறுதிகளாக வரும்.

அ.தி.மு.க., அரசின் கொள்கைகள் என்றால், வளர்ச்சியின் பெயரால், மக்கள் கருத்தைப் புறக்கணித்து, இயற்கை வளத்திற்கு கேடான திட்டங்களை புகுத்தியது; மத்திய அரசின், எந்தச் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தலைநகரில் போராடுகிறார்களோ, அந்தச் சட்டங்கள் ஏற்கனவே, நாங்கள் இங்கே கொண்டு வந்தவை தான் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டது; இந்திய கூட்டாட்சி அமைப்பில், உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாநில சுயாட்சி மாண்புகளை விட்டுக் கொடுத்தது; பொதுத்துறை ஒழிப்பு, மொழித் திணிப்பு, கல்விக்கள அத்துமீறல்கள், அரசமைப்பின் உன்னத மதச்சார்பின்மை கோட்பாடு மீதான தாக்குதல்கள் என, மத்திய ஆட்சியாளர்களின் அதிரடிகளுக்கு மவுன உடந்தையாக இருந்துள்ளது.

நீட் விலக்கல், எழுவர் விடுதலை போன்றவற்றை, எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவோடு, சட்டசபை தீர்மானமாகவே நிறைவேற்றியும், வலுவான அரசியல் முழக்கங்களாக எழுப்புவதிலிருந்து நழுவியுள்ளது என, அடுக்கிக் கொண்டே போகலாம்...

ஒரே அணியாக தொடரும், தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், ம.ம.க., ஆகிய கட்சிகள், இந்த பிரச்னைகள் ஒவ்வொன்றிலும் தலையிட்டுள்ளன. நா.த., - ம.நீ.ம., கட்சிகளும் தனித்தனியே எதிர்த்துள்ளன.

பிரசாரம் நடந்த இடங்களின் தேவைகள் முதல், பொதுவான பிரச்னைகள் வரையில், தங்களிடம் ஆட்சி வந்தால் நிச்சயமாக தீர்வு காணப்படும் என்ற, வாக்குறுதிகளாக முன்வைத்து உள்ளன. என்றாலும், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு, அ.தி.மு.க., அரசு செயல்படுகிறது.

எடுத்துக்காட்டாக, தி.மு.க., ஆட்சி அமையுமானால், வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டமாக்கப்படும் என்று, 2019ல் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இரண்டாண்டுக்கு பின், தேர்தல் அறிவிப்பு நெருங்கிய நொடியில், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலையும் பெற்று விட்டதுபழனிசாமி., அரசு. கூட்டணி தொடர இதை நிபந்தனையாக விதித்த, பா.ம.க., தலைவர் ராமதாஸ் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்பதைத் தாண்டி, இது, தி.மு.க.,வின் வெற்றியும் கூட.

கம்யூனிஸ்ட்டுகளும், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், காவல்நிலைய வன்முறை, ஆணவக் கொலைகள் போன்றவற்றுக்காகவும், உள்ளூர் பிரச்னைகளுக்காகவும் போராட்டங்களை நடத்தின. அதனால், அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பு போன்றவற்றிலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில், அ.தி.மு.க., திடமான நிலைப்பாடு எடுக்கவில்லை என்றாலும், தமிழகத்தில், இருமொழிக் கொள்கையே தொடரும் என்று அறிவிக்க நேரிட்டது. இது, எதிர்க்கட்சிகளின் வெற்றியாகும்.

உச்ச நீதிமன்ற கருத்தைத் தொடர்ந்து, பெண்களின் வீட்டுப் பணிகளுக்காக ஊதியம் என்ற கொள்கையை, பேசுபொருள் ஆக்கியிருக்கிறார் கமல்ஹாசன். வேட்பாளர்களில், 50 சதவீதம் பெண்களே என்று ஆக்கியிருக்கிறார் சீமான்.அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான இயக்கங்கள், உண்மையில் மக்களின் கவனத்தைக் கோருபவையே. அப்படி மக்களிடம் தாக்கம் செலுத்துவதில், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனவா?

எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு கூட்டம் திரண்டது உண்மை. ஆனால், அத்தனை பேரும் அல்லது ஆகப்பெரும்பாலோர் அந்தந்த கட்சிகளை சார்ந்தவர்களே. ஊடகங்களின் வழியாக, அந்த இயக்கங்கள் பொதுமக்களிடம் சென்றிருக்கின்றன. ஆனால், அவை செய்திகளாகச் சென்றடைந்த அளவுக்கு, மக்களின் சிந்தனைகளாக மாறியிருக்கின்றனவா?

ஆட்சியாளர்களை பொறுத்தவரையில், மக்கள் அவர்களின் கையை எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலைமை, ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அதற்குள் ஊடுருவி, மாற்றுக் கொள்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. 'எதிர்க்கட்சிக்காரங்களுக்கு எதிர்ப்பது தான் வேலை' என்ற, மக்களின் மனநிலையில், அசைவை ஏற்படுத்தியாக வேண்டும். அதில் வெற்றி கிடைத்திருக்கிறதா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் ஆம் என்று கூறி அங்கீகரித்து விட இயலாது; இல்லை என்று தள்ளிவிடவும் முடியாது. 'காலம் தான் பதில் சொல்ல வேண்டும்' என்று முடிப்பதில் உடன்பாடு இல்லை என்றாலும், இப்போதைய சூழலில், மே, 2 வரையிலாவது காத்திருக்கத்தான் வேண்டும்.

அ.குமரேசன்

இடது சாரி சிந்தனையாளர்

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-மார்-202113:49:03 IST Report Abuse
sankaseshan குமரேசருடைய சிந்தனை இடதுசாரி தன்மாக இருக்கும் நீட் உச்சநீதி மன்ற உத்தரவு , மாநில Sattasabayil தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசை கட்டுபடுத்தாது, இதெல்லாம் இவருக்கு தெரியும். இடதுசாரிகள் விதண்டாவாதம் செய்பவர்கள் . ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யமாட்டார்கள் கேரளா தங்கக்கடத்தலால் நாறுகிறது குமரேசரு வாயை திறக்கமாட்டாரு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X