
எத்தனையோ பேரை வாழவைத்த தினமலர் கவுரவ ஆசிரியரும்,நாணவியலின் தந்தையுமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு பலரது மனதை உலுக்கி எடுத்துவிட்டது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அஞ்சலி செலுத்த அலைஅலையாய் வந்து மக்கள் அனைவரும் மவுனமாக கண்ணீர் சிந்திக்கொண்டு சென்றனர்.
அங்கு நிலவிய அந்த மவுனத்தை உடைத்துக் கொண்டு ஒரு அழுகுரல் கேட்டது.
ஐயா,நான் தாயம்மாள் அறவாணன் வந்திருக்கேன்யா ,எங்க ஊர்க்காரி என்று என்னை சீராட்டி பாராட்டுவீர்களே இனி என்னை யார் அப்படிச் சொல்லி பாராட்டுவார்கள், எனக்கும் என் கணவருக்கு நீங்கள் காட்டிய அன்பும் பாசமும் கொஞ்ச நஞ்சமில்லை,திருநெல்வேலி ஊர்ப்பாசத்தோடு நீங்கள் அந்த ஊரின் வளர்ச்சிக்கு நிறைய செய்துள்ளீர்கள்,எனக்கு எத்தனை புத்தகம் வாங்கிக் கொடுத்திருப்பீங்க, நான் எழுதின புத்தகத்தை எல்லாம் வாசிச்சு என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவீங்களே என்னை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் நீங்கதாய்யா ஊக்க சக்தி இப்படி திடீர்னு போய்ட்டிங்களேய்யா என்று நேருக்கு நேர் பேசுவது போல அழுகையுடன் பேசிக்கொண்டே இருந்தார்.

அவரை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான விஷயமாகிப் போய்விட்டது. வழக்கம் போல தினமலர் பேப்பரை காலையில படிக்க எடுத்தேன் முதல் பக்கத்திலே நீங்க இறந்துட்டிங்கன்னு செய்தி இருந்தது.எனக்கு இடி விழுந்த மாதிரி ஆகிப்போச்சுங்கய்யா,அப்படியே உங்கள பார்க்க ஒடிவர்ரேன் என்றவர் வார்த்தையில் இருந்தது அனைத்தும் நிஜம் என்பதை பறைசாற்றும் விதத்தில் கையில் தினமலர் இருந்தது.
தற்போது 77 வயதாகும் தாயம்மாள் நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து மறைந்த அறவாணனின் துனைவியாவார். சேந்தன்புதூர் எனுமிடத்தில் பிறந்த இவர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர், 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர், பெண்ணியம் தொடர்பாக பல நூல்களை எழுதி மகளிர் பல்கலைக்கழகத்துக்குப் பெருமை சேர்த்தவர். 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' வாழ்ந்த பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து 685 பக்க நூலாக, பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கியவர்.இத்துணை புகழ் இருந்தாலும் எளிமயைின் சின்னமாக இருப்பவர்,தினமலர் கவுரவ ஆசிரியர் மீது அளவு கடந்த பிரியம் கொண்டவர்.அந்த பிரியத்தை பாசத்தை கட்டுப்படுத்த முடியாமல்தான் அழுகையாக வெடித்துவிட்டார்.
என் குழந்தைகளை படிக்க வைத்தவர்,என்னை நம்பி 21 வயதில் பொறுப்பைக் கொடுத்தவர்,நான் கேட்காமலே ஏஜென்சி கொடுத்து என் குடும்பம் வாழ வழிகாட்டியவர்,இன்று வரை என் பின்னனி எது என்று கேட்காமல் வேலை கொடுத்தவர்,கோபப்படாதவர்,பதட்டப்படாதவர் என்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஒவ்வொருவரிடமும் ஒரு நிஜக்கதை இருந்தது.
அவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஐயா அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்,இருப்பார்.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE