கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், நந்தி கிராம் தொகுதியில், மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். இதையடுத்து, மேற்கு வங்கத்தில், பிரசாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், 294 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு, வரும், 27ம் தேதி முதல், எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஜி.ஜே.எம்., எனப்படும், கூர்க்கா முக்தி மோர்ச்சா போட்டியிடுகிறது.
இந்த கட்சிக்கு மூன்று தொகுதி களை, மம்தா பானர்ஜி ஒதுக்கியுள்ளார்.மீதமுள்ள, 291 தொகுதி களுக்கான திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை, கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் தான், வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளோம். 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், 50 பேர் பெண்கள், 79 பேர் பட்டியலினத்தவர்கள், 17 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம் வேட்பாளர்கள், 42 பேர் போட்டியிடுகின்றனர்.
நந்திகிராம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். வரும், 10ல் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.நந்திகிராம் தொகுதியில், மம்தாவை எதிர்த்து, பா.ஜ., சார்பில், முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE